Monday, 8 August 2016

ஜோதிடம்

ஆயக்கலைகள் 64ல் ஜோதிட சாஸ்திரமும் ஒன்று. அது ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயக்கலைகள் 64க்கும் அதிபதி "சுக்கிரன்" ஆக ஜோதிடத்தின் அதிபதியும் சுக்கிரனே என்ற உண்மைக் கருத்தோடு, ஜோதிடத்திற்கான விளக்கத்தையும், உருவான காலத்தையும் பற்றி மேற்கொண்டு அறியலாம்.

"நாம்" என்பது "பிரபஞ்சத்தின்" பிரதி, ஆக நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் சாஸ்திர நூலே ஜோதிடமாகும். குறிப்பாக, அகம் மற்றும் புறத்திலிருக்கும் ஜோதியை தொடர்புபடுத்திக் கூறுவதாகும். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமெனில், பிரபஞ்சத்தத்துவம் (அ,உ,ம்−நமசிவாய) மற்றும் சப்தரிஷி மண்டலத்தில் (நட்சத்திர தாத்பர்யம்) கோள்களின் இயக்கம், அதுபோல நம்மில் உயிர்த்தத்துவம் (உயிர்/ஆன்மா−மனம்) மற்றும் உடற்கூறுத் தத்துவத்தை (தத்துவங்கள்−96) ஒருமித்தே உள்ளடக்கிய சாஸ்திர நூலே ஜோதிடமாகும். அதாவது கோள்களும், வான்வெளியில் அவற்றின் நகர்வுகளும், புவியில் வாழும் எல்லா உயிரினங்கள் மீது அவற்றின் செயல்பாடுகளிலும் மற்றும் இயற்கை நிகழ்வுகளிலும் பலவிதமான தாக்கங்களை உண்டாக்குகின்றன என்பதே ஜோதிடத்தின் அடிப்படைப் புரிதலாகும்.

ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாக கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும், எப்போது எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்க ஜோதிடக் கணிதம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. அவை,

1. சித்தாந்த ஸ்கந்தம்
2. சம்ஹித ஸ்கந்தம்
3. ஹோர ஸ்கந்தம்

#சித்தாந்த_ஸ்கந்தம்: அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது.

#சம்ஹித_ஸ்கந்தம்: வானவியல் மற்றும் ஜோதிடக் கணிதம் முதலான துறைகளைப் பேசுகிறது.

#ஹோர_ஸ்கந்தம்: கோள்களின் இயக்கம் மற்றும் அவற்றின் கதிர்வீச்சுகள் பூமியின் மீதும், மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பருப்பொருட்களே. அவை அனைத்துமே குறிப்பிட்ட ஈர்ப்பு மற்றும் விலக்கு விசையின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் ஜோதிட நூல்கள் 7 கோள்களைப் பற்றி மட்டுமே கூறுகின்றன. ஏனைய இரண்டாகிய ராகு மற்றும் கேது என்பன நிழற்கோள்கள் அல்லது கற்பனைக் கோடுகள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் நாம் அறிந்ததே.

கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் குறிப்பதற்கு ஜோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட முறையையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது கண்ணுக்கு புலப்படாத 360 பாகைகள் கொண்ட ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பாவங்களாகப் பிரிக்கப்பட்டு, பாவத்திற்கு 9 பாதங்கள் என உடற்கூறுத் தத்துவத்துவத்தின் (ஜீவ நாடிகள்−108) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோதிட சாஸ்திரம் ரிஷிகளாலும், முனிவர்களாலும் இரண்டாம் கற்பத்தின்−இரண்டாம் யுகத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதுதான் ஶ்ரீ ராமபிரான் அவதரித்த காலமாகும். முதல் யுகத்தில் பஞ்ச (சு,பு,செ,சனி,கு) கிரகங்களும், இரண்டாவது யுகத்தில் சப்த (சூரியன்−சந்திரனும்) கிரகங்களும், மூன்றாம் யுகத்தில் நவக் (ராகு−கேதுவும்) கிரகங்களும், நான்காவது யுகத்தில் தசக் (மாந்தியும்) கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதாவது, யுகங்கள் மொத்தம் நான்கு. அவை,

1. #கிரேதாயுகம் (34,56,000 வருடங்கள்)
2. #திரேதாயுகம் (17,28,000 வருடங்கள்)
3. #துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. #கலியுகம் (4,32,000 வருடங்கள்)
இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு #மகாயுகம் (64,80,000 வருடங்கள்).

71 மகாயுகம் கொண்டது ஒரு #மனு.
14 மனு கொண்டது ஒரு #கற்பம். ஆக, ஒரு கற்பம் என்பது 644,11,20,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,117 ஆண்டுகள் ஆகிறது. இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதலாவது கற்பமான #வாமதேவ_கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான #சுவதேவராக_கற்பம் (60,53,117 வருடங்கள்) இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிவடைந்து நான்காவது யுகமான #கலியுகம் (5117 வருடங்கள்) நடந்து கொண்டிருக்கிறது.

−தொடரும்...

No comments:

Post a Comment