முன்னுரை: ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் என்றால் என்ன, அவற்றிற்குள்ள தொடர்புகள் யாவை, அவை நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் எவ்வாறு காரணமாகின்றன என்பது பற்றி விரிவாகக் காணலாம்.
1.ஆன்மீகம்:
ஆன்மீகம் என்றதும் நம் மனதில் தோன்றுவது "#இறைசக்தி". அவ்விறை சக்தியே ஆன்மீகத்திற்கு பிரதானம். அதாவது நம்மை எது இயக்குறதோ அல்லது நாம் இயங்க எது காரணமாய் இருக்கிறதோ அதைத்தேடிய பயணம்தான் "#ஆன்மீகம்". இறைவன் எங்கும் இருக்கிறார், அதாவது அகத்திலும் இருக்கிறார், புறத்திலும் இருக்கிறார், எனில் எப்படி இருக்கிறார்..? "சத்" ஆகிய #ஒளியாகவும், "சித்" ஆகிய #ஒலியாகவும் ஒன்று சேர்ந்து #ஓம்காரமாகவும் மண், நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத தத்துவங்களான #நமசிவாயமாய் அகமும், புறமும், எங்கும் பரிணமித்திருக்கிறார். இங்கு "ஒளி/ஒலி" என்பது இறைவனின் சூட்சும வடிவம், அதுபோல பஞ்சபூதமென்பது இறைவனின் ஸ்தூல வடிவம். அப்படியான இறைசக்தியை புறத்தில் தேடினால் அது #பக்திமார்க்கம், மாறாக அகத்தில் தேடினால் அது #ஞானமார்க்கம். இதை ஜோதிட முறையில் கூறவேண்டுமெனில், "நான்" என்பது #தன்னிலை−1ம் பாவம், அத்தன்னிலையின் எதிர்பாவமான 7ம் பாவம், #முன்னிலை. இதில் 7ம் பாவத்திலிருந்து 12ம் பாவத்தை நோக்கிய ஆரோகணப் பயணமான அடைதல்/பெறுதல் என்பது பக்திமார்க்கம், அதுவே 7ம் பாவத்திலிருந்து 1ம் பாவத்தை நோக்கிய அவரோகணப் பயணமான துறத்தல், இருத்தல் என்பது ஞானமார்க்கம், இவையெல்லாம் தான் ஆன்மீகமும், அவை சார்ந்த விசயங்களும்.
2.ஜோதிடம்:
ஜோதிடம் என்றதும் நாம் புறத்தில் 360 பாகைகள் கொண்ட ஒரு கற்பனை வட்டத்தில் 12 ராசிகளை வரைந்து, அதில் 27 நட்சத்திரங்களை 108 நட்சத்திரப் பாதங்களாக உள்ளடக்கி, அதன்மேல் 9 கிரகங்கள் வலம் வருவதுதான் ஜோதிடமா..? இல்லைவே இல்லை, அது "வானியல் சாஸ்திரம்". எனில் எது ஜோதிடம்...? ஜோதிடம் என்பது #சார்புடைமை (relativity), அதாவது அகத்திற்கும் புறத்திற்கும் இடையேயுள்ள தொடர்புதான் ஜோதிடம். உதாரணத்திற்கு #ஆத்மகாரகன்−சூரியன்; #மனோகாரகன்−சந்திரன், எனில் புறத்திலிருக்கும் சூரியன்/சந்திரனுக்கும், அகத்திலிருக்கும் ஆன்மா/மனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? இருக்கிறது, அது யாதெனில் புறத்தில் #சூரியன்−வெப்பம்; அகத்தில் #ஆன்மா−வெப்பம், ஆக வெப்பம் என்கிற தன்மை அகமாகிய ஆன்மாவிற்கும், பறமாகிய சூரியனுக்கும் சார்புடைய காரணியாக இருப்பதால் "சூரியன்−ஆத்மகாரகரானார்". அதுபோல போல புறத்தில் சந்திரனின் சலனமாக காலமும், அகத்தில் மனத்தின் சலனமாக காலமும் இருப்பதால், இங்கு #காலம் என்பது மனதுக்கும், சந்திரனுக்கும் சார்புடைய காரணியாகி "சந்திரன்−மனோகாரகரானார். ஆக இவைதான் ஜோதிடவிளக்கமும், அதன் சார்புடைய விசயங்களுமாகும்.
ஜோதிடம் எங்கு/எப்படி செயல்படுகிறது..?
ஜோதிடம் என்பது அகத்திற்கும்/புறத்திற்கும் சார்புடமையான காரணியெனில் அது செயல்படும் இடம் என்பது உயிரோட்டமான நாமகத்தான் இருக்கவேண்டும். அதாவது, புறத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் அகத்திலும் இருக்கிறது. அதாவது புறத்தில் பாவிக்கப்படும் 12 பாவங்கள் (ராசிகள்) அகத்திலும் இருக்கிறது, மேலும் புறத்தில் 360 பாகைகளுக்குள் அடங்கியிருப்பதாக கருதப்படும் 108 நட்சத்திர பாதகங்களும், அகத்தில் 108 பிரதான நாடிகளாய் இருக்கிறது. அதுபோல, புறத்திலிருக்கும் ஒன்பது கிரங்களும், அகத்திலும் சூரிய/சந்திர கலைகளாகவும், ஆதாரச் சக்கரங்களாவும் செயல்படுகிறது. அதாவது வெளியே ஒரு கிரகம் இருக்கிறது எனில், அக்கிரகத்தின் ஒளி/மின்காந்த கதிர்வீச்சை கிரகிக்கக்கூடிய பொருள் அகத்திலும் இருந்தால் மட்டுமே அக்கிரகத்தின் தன்மைகள் நம்மில் பரிணமித்து, நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் காரணமாயிருக்குமே, தவிர சம்பந்தமில்லா அல்லது தொடர்பில்லா ஒரு பொருள் காரண/காரியமாக இருக்க வாய்பே இல்லை.
மேலும் கிரகங்களின் அதிர்வலைகள் நிலைசக்தியான (static energy) ஒளியாயால் (photons) கவரப்பட்டு, இயங்குசக்தியான (kinetic energy) ஒலியால் (சப்த/ஸ்வரம்) இவ்வளியெங்கும் கடத்தப்படுகிறது. அப்படியான கதிர்வீச்சுகள் நம்மில் தொடர்புபடுவது ஐம்புலன்களினூடேயாகும், அதில் சுவாசமே பிரதானம். காரணம் ஒரு குழந்தை ஜனித்து, அது எடுக்கிற முதல் சுவாசமே லக்கினமாகிய உயிர்/ஸ்தானம், எனில் அச்சுவாசம் வழியாகத்தான் இப்பிரபஞ்ச விசயங்கள் நம்மில் ஊடுருவி, நம் உடலின் ஆதாரச் சக்கரங்களில் கடைதலுண்டாகி, நாடிகளின் வழியே உடலெங்கும் பரிணமிக்கிறது. அதுபோலவே, கிரகங்களின் பார்வை என்பதும் நம்முள் இருக்கும் அப்பாவங்களின் தன்மைகள், அது தொடர்புடைய கிரக கதிர்வீச்சுக்களை, சுவாசத்தால் உட்கிரகிக்கப்படு செயல்படுகிறதே, தவிர புறத்தில் எந்தக்கிரகமும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதுமில்லை, அதனால் நமக்கும் எந்தப் பயனுமில்லை. இப்படியாகத்தான் அனைத்து கிரகதன்மைகளும் நம்மில் உட்கிரகிக்கப்பட்டு செயல்படுகிறது.
#பரிகாரம்:
நாம் காலத்தில் பயணிப்பதால் பரிகாரம் என்பது காலத்தை உள்ளடக்கியது. அக்காலமானது நம்மில் கர்மாவாய் பரிணமித்திருக்கிறது. அதாவது, கர்மா என்பது நமக்கு விசயமாகும்போது அது காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஏனெனில், காலத்திற்கு அப்பாற்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் இவ்வுலகில் எதுவும் இல்லை. ஆக, காலமாகிய கர்மாவின் பரிமாணங்களை மூன்று வகையாகச்சொல்லாம், அவை
1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய கர்மா)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)
இதில் சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய ஆகாமியத்தில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் தான் உள்ளது, தவிர நம்மில் செயல்படும் பரிகாரம் என்பது நிதர்ஷனம். உதாரணம், ஒருவருக்கு உடலில் விட்டமின் A குறைவு எனில், விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் நமக்கு மிக அவசியமாகிறது.
அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் பலவிதமான மாற்றுக்கருத்து உண்டு. அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆனால், பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.
1. சஞ்சீதம்/ஜாதகம் − இது கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை ஸ்தூலம் அழியும் வரை யாராலும் மாற்ற இயலாது
2. பிரார்ப்தம்/கோள்சாரம் − இது சஞ்தீதத்தால் விதிக்கப்பட்டதன் தற்சமய நிகழ்வு ஆகும்.
3. ஆகாமியம் − தசா/புக்தி/அந்தரம், இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்.
ஏனெனில் தசா, புக்தியப் பயன்படுத்தாமல் எதிர்காலப் பலன்களைச் சொல்லமுடியாது, எனில் தசா/புக்தி என்பது யாது..?
தசா/புக்தி என்பது நம் அகத்தின் நாடியாகும். அதாவது, நம் ஜீவனானது நம் ஸ்தூலத்துடன் பந்தனப்பட்டு நாடிகளாய் இயங்குகிறது, இதுவே நாடிபந்தனமாகும். இங்கு, ஜீவனாகிய−ஆன்மா என்பதும், ஜீவநாடியாகிய−நாடிபந்தனம் (உடலுடன்/ஆன்மா) என்பதும் வேறு வேறு என்பதன் புரிதலும் மிக அவசியம். இப்போது ஒருவருக்கு புதன்/திசை நடக்கிறது என்றால் அவருக்கு புதன் நாடி பிரதானமாகவும், சனி/புக்தி நடக்கிறது எனில் அதனைத்தொடர்ந்து சனி நாடியும், அப்படியாக ஏனைய கிரங்களின் நாடிகளும் உடலில் ஓடுகிறது என்று அர்த்தம்.
அதாவது, விம்சோத்தரி தசையில் 120 ஆயுள் கணிதம் எவ்வாறு வந்தது..? ஆயுள் எனில் சுவாசமும் இருக்கவேண்டும்தானே, அப்போ சுவாசமெனில் நாடிகளின் இயக்கங்களும் அங்கு வந்துவிடும்தானே..? எனவே நாம் செய்யும் அத்துனை விசயங்களையும் நாடிகளால் மாற்றியமைத்து, நமக்குத் தேவையான தன்மையை நம் உடலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும்தானே...? இதுதானே பரிகாரம் என்பதும்..? மேலும் மேற்கூறிய பிரபஞ்ச விசயங்கள்தான் நாடிகளில் கடைதலுண்டாகி உடலில் உட்கிரகிக்கப்படுகிறது, அற்றின் ஏற்ற/இறக்கங்கள்தானே நம் உடலின் தன்மையில் பல மாற்றங்களை (நோய்) உண்டுபண்ணுகிறது, ஆக கோவில்களில் தீர்மானிக்கப்ட்டிருக்கும் பஞ்சபூத/நவக்கிரகத் தன்மையை உட்கிரகித்து நாடிகளின் தன்மையையும் மாற்றியமைக்க முடியும் என்பது நிதர்ஷனமான உண்மை.
உதாரணமாக நாம் நின்றால், நடந்தால், படுத்தால், ஓடினால் நாடிகளும் மாறி ஓடும், அது போல குளிர்ந்த நீரைப் பருகும்போது ஒருவித நாடியும், வெந்நீரைப் பருகும்போது வேறுவிதமான நாடியும் மாற்றி ஓடுகிறது என்றால், நாம்/நமக்குத்தேவையான விசயங்களை நாடிகளில் நிலைநிறுத்தி, நம் உடலின் தன்மையை மாற்றியமைக்க இயலும்தானே, ஆக பரிகாரம் செயல்படுகிறதா/இல்லையா என்கிற ஐயம் நமக்கு ஏற்படக்கூடாது, தவிர நாம் கூறும் பரிகாரமென்பது சரியானதா என்பதுதான் இங்கு மிக முக்கியம்.
#முடிவுரை: இப்போது பாருங்கள் அகம் மற்றும் புறத்தின் சூட்சும விசயமான ஒளி/ஒலித் தன்மைகளும், ஸ்தூலமான பஞ்சபூத/நவக்கிரகத் தன்மைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது எனில் நான் மேற்கூறிய ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபடுகிறது என்பதையும் அறியவேண்டும், இச்சிருஷ்டியும் அப்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.
C.S.மல்லீஸ் குமார்
சென்னை