Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, 28 September 2020

சிருஷ்ட்டி (1,5,9)

இறை அல்லது இருப்பு அல்லது தன்னிலையாகிய ஒருமை; ஐந்தாகிய பஞ்சபூதங்கள் மற்றும் ஒன்பதாகிய நவக்கிரகங்கள் ஆகிவற்றின் முழுமையே நாம் மற்றும் நம் இயக்கத்தின் மூலமாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நிசப்தம் (அமைதி):

அமைதி என்கிற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அது நம் புலனுக்கு மட்டுமே விசயம், தவிர பரந்து விரிந்த இவ்வுலகம் அமைதியாய் இருப்பதாகத் தோன்றினாலும் அதை உற்று நோக்கினால் இரைச்சல்கள் இருப்பதை உணரலாம். ஏனெனில் அமைதி என்பதே இரைச்சலுடன் கூடிய சப்தமாகும். காரணம் இப்பிரபஞ்சம் என்பது ஓசை வடிவானது. அது சப்தத்தால் எங்கும் நிரப்பப்பட்டுள்ளது. எனவே அப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான நமக்கும் இது பொருத்தும். இத்தன்மையை ஆழ்ந்த தியானத்தில் நன்றாகவே உணரலாம்.

உதாரணமாக, எக்காளம் என்கிற மீயொலியையும் ( >20,000dB), உயிரோசை என்கிற சிற்றொலியையும் ( <20dB) நம் செவியால் உணர இயலாது. அதாவது குறிப்பிட்ட ஒலி அளவீடுகளுக்குள் (20−20,000dB) இயங்கும் சப்தங்களை மட்டுமே நம் செவியால் உணர இயலும். அதனால் உணர இயலாத சப்தங்கள் நிசப்தமாத் தெரியுமே, தவிர அது நிசப்தமாகாது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவருளும் திருவருளும்

நாம் அனைவருமே இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் புரிதல் மற்றும் உணர்தலின் கோணம் வேறுபடுகிறது. இதற்கு நம் உடலின் கட்டமைப்பு, உண்ணும் உணவு மற்றும் நாம் வாழும் இடத்தின் தன்மையே மூலகாரணங்களாகிறது. இங்கு புரிதல் என்பது மனம், புத்தி சார்ந்தும், உணர்தல் என்பது தன்னிலையின் ஆத்ம விசாரத்தைப் பொறுத்தும் இருக்கும்.

மேலும், எந்த ஒரு செயலையும் வெளிப்படுத்த அகங்காரம் என்பது அவசியம். அதாவது, வெளிப்படுத்துதல் எல்லாமே ஒருவிதமான அகங்காரமே. ஆனால், அது எதிர் நிலையில் இருப்பவரை பாதிக்காத வண்ணம், அதாவது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பின் அவ்விசயம் அந்த நபரால் உள்வாங்கப்பட்டு அங்கு உணர்தல் மட்டுமே பிரதானமாயிருக்கும். தவிர, ஒத்துப்போகவில்லையெனில் விலக்கு விசை உண்டாகி அகங்காரம் மட்டுமே கொண்டெழுப்பபடும். அதானாலேயே ஞானிகள் தானுணர்ந்த விசயங்களை விவாதிக்காமல் குருவழி உபதேசமாகத் தந்தனர்.

அதாவது, ஒருவரின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட விசயங்களை எவ்வளவுதான் விளக்கிக்கூறினாலும் அதை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. காரணம் சொல்பவர் & கேட்பவர் இருவேறான தன்மையில் இருப்பின் விசயங்கள் ஒத்துப்போகாது. அதை உணர்த்தவே குரு என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் அரூபமாகவோ ஸ்வரூபமாகவோ இருந்து எதார்த்தத்தின் இயல்பை உணர்த்த காரணமாகிறார். இதுகூட அவரவர் பூர்வபுண்ணியக் கர்மாவைப் பொறுத்தே அமையும்.

அதாவது, யாரால் யாருக்கு எம்மாதிரியான உண்மையை உணர்த்த வேண்டுமென்பதும் கர்மாவின் தீர்மானமே. அப்படியாக அனைவருக்கும் ஏதோ ஒரு வழியில் அக மற்றும் புற குருமார்கள் அமைந்து விடுகின்றனர். சிலருக்கு தன் மனமே சற்குருவாய் இருந்து தம் சித்த கர்மாவை வழிகாட்டுகிறது.

ஆகமொத்தம் கால சலனத்தின் பிடியிலிருக்கும் நம் அனைவரும் எப்படி அதனை கையாண்டு, நம் தேவைக்கேற்ப வாழ்வாதார விசயங்களை நடைமுறைப்படுத்தி அதில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை உணர்த்தவே ஞானிகளால் சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மையக் கருத்தை நம் மனதில் உள்வாங்கி கொண்டு அதை நம் உணர்தல் மற்றும் புரிதல்கள்களுடன் மேலும் கிடத்திப்பார்க்க காலத்தால் நமக்கு சில விசயங்கள் அனுபவமாகின்றன.

மேலும், எந்த ஒரு காரியத்தின் காரணத்தை அறிய அதன் உண்மை அகம் நோக்கித் தேடவேண்டும். காரணம், நாம் காலத்தில் இருப்பதால்தான் இத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் நம்மில் பிறக்கின்றன. நாம் காலதீதனாக (காலமில்லா தன்மை) இருக்க கேள்வி பிறந்த இடத்திலேயே பதிலும்  கிடைத்துவிடும், அதுவே இயல்பு. எனில் காலத்தை விட்டு விலகி நிற்க அறிவால் விளங்கிங்கொள்ள முடியாத பல பிரபஞ்ச விசயங்கள் தன்னுணர்வால் உணரப்படும். இப்படியாகத்தான் ஞானிகள் தாங்கள் உணர்ந்த விசயங்களை அட்சரங்களாகத் தொகுத்து எழுதினர்.

ஏனெனில், ஞானம் சார்ந்த விசயங்கள் அனைத்தும் அறிவால் விளங்கிக் கொள்ளமுடியாத தத்துவார்த்தங்கள் ஆகும். அவற்றை அறிவாற்கொண்டு விளக்கமளிக்க இயலாது. ஆனால், அவற்றை குருவின் அருளால் உணரலாம் அல்லது அத்தமையில் வியாபித்து அதனை நம் அகத்தின்வழி உள்நோக்கிச் செலுத்த அவையனைத்திற்கும் நமக்குள் தெளிந்த பதில் கிடைக்கும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஆதாரசக்கரம் - எமது விளக்கம்

அஉம். சகஸ்ரரா − பரமேஸ்வரன்/பரமேஸ்வரி (ராகு)

அண்டம் (மகாரம்):
1(ய). ஆக்னா/ஆகாயம் − சதாசிவ(ம்)+மனோன்மணி (குரு)

கண்டம் (உகாரம்):
2(வா). விசுக்தி/வாயு − மகேஸ்வரன்+மகேஸ்வரி (சனி)

பிண்டம் (அகாரம்):
3(சி). அநாகதம்/நெருப்பு − ருத்ரன்+பார்வதி (செவ்வாய்)

4(ம). மணிப்பூரகம்/நீர்− பிரம்மா+சரஸ்வதி (புதன்)

5(ந). சுவாதிஸ்டானம்/மண்− விஷ்ணு+லட்சுமி (சுக்கிரன்)

6. மூலாதாரம் − சக்தி/விநாயகர் (கேது)

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சதாசிவ பிரம்மேந்திரம்

காரிய உடலில் மஹா காரணத்தை (ஆத்மா) தாங்கி "கர்மவினையில்" பயணிக்கும் நமக்கு 24 மணி நேரமும் தன்னுணர்வில் இருக்க வாய்ப்பில்லை. அதாவது லீலையில் இருந்து கொண்டு நித்தியமாய் மாறும் தன்மை என்பது மீண்டும் தாயின் கருவறைக்குள் பயணிக்கும் நிலைப்பாடு போலாகும். ஆனால் இயல்பிலோ அல்லது தியானத்திலோ அந்நிலை சில வினாடிகள் அல்லது நாழிகைகள் மட்டும் வாய்க்கப்பெற்று தன்னுணர்வின் ஏகாந்தத்தில் (பரமசுகம்) லயித்திருக்கலாம். அதுவே மனமில்லா/காலமில்லா "காலபைரவ" நிலையாகும். ஆனால், இந்நிலை தொடர்ந்து நீடித்து ஏதுமற்ற நிலைக்குள் பரிணமித்தால் அதுவே "சதாசிவபிரம்மேந்திரம்" ஆகும், தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ண பிரேமையான லீலையில்தான் லயித்திருப்போம். அதுவே "பிரம்மை" என்றும் "மாயை" என்றும் அழைக்கப்படும்!

கிருஷ்ண பிரேமையில் "பஞ்சபூதமாகிய" இருப்போடு "நவக்கிரகமாகிய" இயக்கம் சேர்ந்து, அதில் சூட்சுமமாகிய "மனமும்" லயித்து உலகம் உண்டாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சைவ நாற்பாதங்கள் (முக்திக்கான வழிகள்):

ஆத்ம ஸ்வரூபமாய் இருந்து இப்புவியில் உடலெடுத்த மறுகணமே மனிதனின் கர்மவினை தொடங்கிவிடும். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அகங்காரம் என்பது சக்தியின் ஸ்வரூபமாய் அவரவரவர் தன்மையைப் பொறுத்து வெளிப்படும். அத்தகைய மாபெரும் சக்தியை தவத்தால்/யோகத்தால் அகத்தில் செலுத்தி சிவத்துடன் இணைத்தால் முக்தியாகும். ஆனால் பாமரனுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் மனிதன் முக்தி நிலையை அடைய நான்கு விதமான மார்க்கங்கள் உண்டு. அது சைவ நாற்பாதங்கள் என்றழைக்கப்படும்.

சைவ நாற்பாதங்கள் என்பது மனிதன் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் திருவடியை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதனை சைவ நன்னெறிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் எனவும் கூறப்படுகிறது. அவை,

1. சரியை - பக்திமார்கம்
2. கிரியை - கர்மமார்க்கம்
3. யோகம் - சகமார்க்கம்
4. ஞானம் - சன்மார்க்கம்

1. சரியை (பக்திமார்கம்):

சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவாக செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.

ஆலயங்களில் இறைவனை மனமுருகி வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

சரியையின் நாற்படிகள்:

அ. சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

ஆ. சரியையிற் கிரியை - ஒரே ஒரு மூர்த்தியை வழிபடல்.

இ. சரியையில் யோகம் - வழிபடும் கடவுளை தியானித்தல்.

ஈ. சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

2. கிரியை (கர்மமார்க்கம்):

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக வேத சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறிக்குள் அடங்கும்.

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல் (பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும். செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தலும் கர்மமார்க்கமேயாகும்.

கிரியையின் நாற்படிகள்:

அ. கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

ஆ. கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

இ. கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

ஈ. கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

3. யோகம் (சகமார்க்கம்):

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (வாசி) ஆகிய "அட்டாங்க யோகங்கள்" உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

யோகத்தின் நாற்படிகள்:

அ. யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

ஆ. யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

இ. யோகத்தில் யோகம் - தியானம்

ஈ. யோகத்தில் ஞானம் - சமாதி

(சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

4. ஞானம் (சன்மார்க்கம்):

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்து "சதாசிவபிரம்மேந்திரமாக" இருத்தல் ஆகும். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் அறிந்து இறையின் அம்சமாகவே மாறுதல். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முந்தைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

ஞானத்தின் நாற்படிகள்

அ. ஞானத்திற் சரியை - ஞான நூல்களைக் கேட்டல்.

ஆ. ஞானத்திற் கிரியை - ஞான நூல்களைச் சிந்தித்தல்.

இ. ஞானத்தில் யோகம் - ஞான நூல்களால் தெளிதல்.

ஈ. ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்ட்டை கூடல்.

(மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்)

Edited by
C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவழி தியானமே சிறந்தது

ஒருவருடைய உடல் கட்டமைப்பு மற்றொருவரின் உடல் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடும். அதன் அடிப்படையில்தான் யோகாசன/தியானப் பயிற்சிகள் குருமார்களால் வழங்கப்படும். அதனால், யாராக இருந்தாலும் தியானம் பழகும் காலங்களில் அவரவர் குருநாதரின் கண்காணிப்பில் இருந்து பழகுவது மிக மிக அவசியம். தவிர, குருமுகமின்றி தாமாகவே யோகம் அல்லது தியானம் செய்ய முயன்றால் அதனால் வரும் உடல் உபாதகளை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

உதாரணமாக:−

1. கண், நாசி, செவி, மர்ம உறுப்புகள் மற்றும் மலத்துவாரங்களில் இரத்தக் கசிவு ஏற்படலாம்

2. மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகலாம்

3. பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகி மாதவிலக்கு பிரச்சனைகள் (over bleeding) வரலாம்

4. வாதம்/கபம்/பித்தம் ஆகிய மும்மலங்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடல் உபாதைகள் வரலாம்

5. சூன்யாவிற்குள் மனம் சென்று திரும்பி வெளியேற இயலாமல் கோமா (சமாதி) நிலைக்குச் செல்ல நேரிடலாம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

ஆன்மீக ஆலாபனைகள்

"ஆன்மீகம்" என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதாவது பக்தி, கர்மம், யோகம், ஞானம் என அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு ஆன்மீகப் புரிதல் இருக்கும். பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பக்தி மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர். காரணம், அதுவே ஆன்மீகத்தின் அடிப்படையுமாகும். அதன் இறுதிநிலை என்பது சரணாகதியாகும்.

ஆன்மீகம்:

"நம் மூலத்தை நோக்கிய பயணமே ஆன்மீகமாகும்". காலத்திற்கு ஏற்றவாறு ஆன்மீகப் பயணத்தில் மேற்கூறிய படிகளுண்டு. ஆனால், அந்த மூலம் என்பது இறைவன், பிரம்மம், சிவன், ஆன்மா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், தவிர அதுவே முதன்மையாகும்.

கலியுகத்தில் ஆன்மீகம்:

கலியில் ஆன்மீகம் என்பது மாயையாகவே சித்தரிக்கப்படுகிறது. அதாவது அருவுருவற்ற இறைவனுக்கே உருவம் தரித்து வழிபடும் தன்மை பிரதானமாயிருக்கிறது. காரணம், மனமாகிய மாயைக்கு ஒரு கற்பனை உருவம் தேவைப்படுகிறது. அப்படியிருந்தால் மட்டுமே அது இறைவனை நிந்திக்கும். அதுவே மனத்தின் இயல்பும்கூட. இதுகூட நபருக்கு நபர் அவரவர் புரிதல் உணர்தலைப் பொருத்து வேறுபடும். அதாவது சிலர், இருக்கும் இடத்திலிருந்தே அகத்தில் இறைவனை உணர்ந்து ஏகாந்தத்தில் திளைப்பர், ஆனால் சிலருக்கு சிலையோ அல்லது படத்தையோ பார்த்தால்தான் பக்தி உருவெடுக்கும். இவையெல்லாம் முழுக்க முழக்க மனத்தின் மாயை சார்ந்த விசயங்களே!

முனிவர்கள்

அவரவர் இருக்கும் இறைநிலைத் தன்மையைப் பொறுத்து பெயர்கள் வேறுபடும் அதாவது கிரகஸ்தன், உபாசகர், யோகி, சாமியார், துறவி, சந்யாசி, தபசி, முனிவர் சித்தர், பித்தர், மஹரிஷி மற்றும் தேவர்கள் என வேறுபடும். ஆனால் அக்காலத்திலிருந்த ஆன்மீகவாதிகள் உடுத்தும் உடைகளுக்கும் வேஷங்களுக்கும் காரண/காரியமிருந்தது. அதாவது பிரபஞ்ச சக்தியை ஈர்க்க குடுமியும், தாடியும், தன்னில் இருக்கும் இறைசக்தி உச்சந்தலை (பத்தாவது வாசல்) வழியாக வெளியேறாமல் இருக்க உச்சிக்குடுமியும், விந்துவைக் கட்ட கோவணமும், மந்திர உச்சாடனைகளை எண்ண மணி மாலையும், பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈரக்க நவக்கிரக மற்றும் ருத்ராக்ஷ கொட்டைகளும், உடலில் வியர்வை தங்காமலும், ஈரத்தை உறிஞ்ச விபூதி பட்டைகளும், உடலை குளுமையாக்க சந்தனமும் தரித்தனர். ஆனால், இவை அனைத்துமே சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. காரணம் காடுகளிலும், மலைப் பாறைகளிலும், கடுங்குளிரிலும் இருப்பவர்களுக்கே இது விசயமாகும்.

நவீன சாமியார்கள்:

தாடியும் குடுமியும் வளர்த்து பட்டை போட்டு, கொட்டையிட்டு, காவியுடுத்தினால்தான் இறைநிலை வாய்க்குமா..? அப்படியிருந்தால்தான் ஆன்மீகத்தின் உச்சநிலையை தொட இயலுமா..? இல்லை, காரணம் அவையெல்லாம் மேற்சொன்ன அடிப்படை ஆன்மீக விசயங்களுடன் சேர்த்து, நான் இயமம், நியமம், பிரத்தியாகாரம், தாரணை, பக்தி, யோக, தியான மற்றும் சன்மார்க்க நெறிகளைக் கடைபிடித்து உணவு, உடை, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் என அனைத்து விதங்களிலும் உங்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாகவும், மந்திரம், பூஜை, ஹோமம் என்கிற வேத சம்பத்துக்களைக் கடைபிடித்து அனுஷரிப்பதால் எம்மைவிட்டு சற்று விலகி இருப்பாயாக, காரணம் என்னுடைய இறைசக்தி நிலை உங்களால் தடைபடக்கூடாது என்பதை உணர்த்தும் சமிக்கைகளே, தவிர அது மட்டுமே இறைநிலையாகாது. இன்னும் சரியாகக் கூறவேண்டுமெனில் "அரை நிர்வானக் கோவணமும், முழுநிர்வாணமுமே" ஆன்மீகத்தின் நிரந்தர ஆடையாகும்.

ஆன்மீக ஸ்வரூபிகள்:

மஹா அவதார் பாபா, ஆதிசங்கரர், புத்தர் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் போன்றோர் மேற்கூறிய சாயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உச்சகட்ட இறைநிலை அடைந்தவர்கள். காரணம், அவர்கள் ஞானத்தால் அகத்திலிருக்கும் இறைவனை (ஆன்மா) உணர்ந்து இறைவனாக மாறியவர்கள். இதற்கு எந்த விதமான விளக்கமோ, வியாக்கானமோ தேவைப்படாது. அதாவது, அகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்தநிலை வியாபிக்குமே, தவிர வேஷம் தரிப்பது என்பது எம்மிடமிருந்து விலகி இரு என்பதை அறிவறுத்தவே என்றுகூறி நிறைவு செய்கிறேன், நன்றி!

குறிப்பு: வேஷம் தரிக்ககூடாது என்பது பதிவின் நோக்கமல்ல, தவிர ஏன் மற்றும் எப்போது தரிக்கவேண்டும் என்பது பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நவக்கிரக ஸ்தலங்களும்; மறைக்கப்பட்ட உண்மைகளும்

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நவக்கிரகக் கோவில்களிலும் மூலவர் சிவனாகவும், கிரக சிலையை தனியாகவும் வைத்திருப்பர். உண்மையில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் கிரகமானது உற்சவரே, தவிர அக்கோவிலில் பிரதானமாக இருக்கும் மூலவரிடத்து அக்கிரக சக்திகள் (மந்திர/யந்திர) தீர்மானிக்கப்பட்டிருக்கும். அங்குதான் அக்கிரத்தின் சக்தியோட்டம் அபரிவிதமாக வெளிப்படும்.

அதாவது, எந்த ஒரு நவக்கிர சக்தியும் தனித்து இயங்காது. காரணம், அவற்றின் இயக்க பரிணாமத்திற்கு பஞ்சபூதத் தன்மைகள் அல்லது தத்துவங்களின் சேர்க்கை மிகமிக அவசியம். நான் ஏற்கனவே எம் பதிவுகளில் குறிப்பிட்டிருந்த தன்மை மற்றும் தத்துவங்களைக் கீழே காணலாம்:−

தத்துவங்கள்/தன்மைகள்

ந−மண்/ருத்ரன்
ம−நீ்ர்/அர்த்தநாரீ
சி−நெருப்பு/காலபைரவ
வா−காற்று/நடராஜ
ய−ஆகாயம்/சதாசிவ

ஆக மேற்கூறிய தன்மை/தத்துவங்களுக்கு ஏற்றார்போல நவக்கிரக சக்திகள் மந்திர/யந்திரமாகவோ அல்லது அவ்விடத்தில் இயற்கையாக விரவிக்கிடக்கும் நவக்கிர சக்தியை ஒருமித்தோ அவற்றை பஞ்சபூதத்துடன் சேர்த்து தீர்மானித்து, அக்கலவையை நம் ஸ்தூல உட்கிரகித்தலுக்கு காரியமாகிக்கியுள்ளனர், தவிர எந்த ஒரு நவக்கிரகமும் பஞ்சபூத அம்சமில்லாமல் தனித்து இயங்காது. இங்கு, பஞ்சபூதம்−காரணம்; நவக்கிரகம்−காரியம்.

நவக்கிரக_ஸ்தலங்கள்

1. ஆடுதுறை / சிவசூரியனார் + சூரியன்
2. திங்களூர் / கைலாசநாதர் + சந்திரன்
3. சீர்காழி / வைத்தீஸ்வரர் + செவ்வாய்
4. திருவெண்காடு / சுவேதாரண்யேஸ்வரர் + புதன்
5. ஆலங்குடி / ஆபத்சகாயேஸ்வரர் + குரு
6. கஞ்சனூர் / அக்னீஸ்வரர் + சுக்கிரன்
7. திருநள்ளாறு / தர்பாரண்யேஸ்வரர் + சனி
8. திருநாகேஷ்வரம் / நாகநாதர் + ராகு
9. கீழ்ப்பெரும்பள்ளம் / நாகநாதர் + கேது

ஆக, உற்சவ கிரகத்தை தரிசிப்பதற்காக வரிசைகளில் நின்று கஷ்டப்படுவதை விடுத்து, பஞ்சபூத/நவக்கிரக சக்திகள் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் மூலவரை தரிஷித்து அனுக்கிரகம் பெறுங்கள்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

Thursday, 1 September 2016

நமசிவாய

நம் உடலானது பஞ்ச பூதங்களால் 
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது பூதவுடல். அதுபோல மனிதனின் அறிவுசார் நிலைகளும் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவை,

#பஞ்ச/பூதம் (கிரக தன்மை) − நிலை

ந/மண் (புதன்)− அறியாமை (innocence)
ம/நீர் (சுக்கிரன்) − அனுமானம் (guessing)
சி/நெருப்பு (செவ்வாய்) − அனுபவம் (experince)
வா/காற்று (சனி) − அறிவு (knowledge)
ய/ஆகாயம் (குரு)− ஞானம் (wisdom)

இவை ஸ்தூலம் மற்றும் சூட்சும விசயங்கள் சார்ந்தவை. ஸ்தூலமானது பூதமாகவும் சூட்சுமமானது கிரகமாகவும் பரிணமித்திருக்கும். மேற்கூறியபடி ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தன்மை உண்டு. அதுபோல ஒவ்வொரு பருவ நிலைக்கும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ஆளுமை பிரதானமாயிருக்கும். அதாவது,

நிலை − கிரக/ஆளுமை:

1. அறியாமை − சூ, சந்
2. அனுமானம் − செ, பு, சு
3. அனுபவம் − சனி, ராகு
4. அறிவு − குரு
5. ஞானம் − கேது

அறியாமை அனுமானமாகி
அனுமானம் அனுபவமாகி
அனுபவம் அறிவாகி
அறிவு ஞானமாகும்!

உடலின் இத்தைகைய பஞ்சபூத மற்றும் நவக்கிரக கலவைகளின் கட்டமைப்பைப் (Constrctive design) பொருத்து இதன் அளவீடு நபருக்கு நபர் மாறுபடும். அதாவது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து மனத்தால், புத்தியால், அறிவால் வேறுபடுவது மேற்கூறிய பஞ்சபூத மற்றும் நவக்கிரகக் கலவைகளின் கட்டமைப்பைப் பொருத்தே அமையும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை