நாம் அனைவருமே இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் புரிதல் மற்றும் உணர்தலின் கோணம் வேறுபடுகிறது. இதற்கு நம் உடலின் கட்டமைப்பு, உண்ணும் உணவு மற்றும் நாம் வாழும் இடத்தின் தன்மையே மூலகாரணங்களாகிறது. இங்கு புரிதல் என்பது மனம், புத்தி சார்ந்தும், உணர்தல் என்பது தன்னிலையின் ஆத்ம விசாரத்தைப் பொறுத்தும் இருக்கும்.
மேலும், எந்த ஒரு செயலையும் வெளிப்படுத்த அகங்காரம் என்பது அவசியம். அதாவது, வெளிப்படுத்துதல் எல்லாமே ஒருவிதமான அகங்காரமே. ஆனால், அது எதிர் நிலையில் இருப்பவரை பாதிக்காத வண்ணம், அதாவது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பின் அவ்விசயம் அந்த நபரால் உள்வாங்கப்பட்டு அங்கு உணர்தல் மட்டுமே பிரதானமாயிருக்கும். தவிர, ஒத்துப்போகவில்லையெனில் விலக்கு விசை உண்டாகி அகங்காரம் மட்டுமே கொண்டெழுப்பபடும். அதானாலேயே ஞானிகள் தானுணர்ந்த விசயங்களை விவாதிக்காமல் குருவழி உபதேசமாகத் தந்தனர்.
அதாவது, ஒருவரின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட விசயங்களை எவ்வளவுதான் விளக்கிக்கூறினாலும் அதை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. காரணம் சொல்பவர் & கேட்பவர் இருவேறான தன்மையில் இருப்பின் விசயங்கள் ஒத்துப்போகாது. அதை உணர்த்தவே குரு என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் அரூபமாகவோ ஸ்வரூபமாகவோ இருந்து எதார்த்தத்தின் இயல்பை உணர்த்த காரணமாகிறார். இதுகூட அவரவர் பூர்வபுண்ணியக் கர்மாவைப் பொறுத்தே அமையும்.
அதாவது, யாரால் யாருக்கு எம்மாதிரியான உண்மையை உணர்த்த வேண்டுமென்பதும் கர்மாவின் தீர்மானமே. அப்படியாக அனைவருக்கும் ஏதோ ஒரு வழியில் அக மற்றும் புற குருமார்கள் அமைந்து விடுகின்றனர். சிலருக்கு தன் மனமே சற்குருவாய் இருந்து தம் சித்த கர்மாவை வழிகாட்டுகிறது.
ஆகமொத்தம் கால சலனத்தின் பிடியிலிருக்கும் நம் அனைவரும் எப்படி அதனை கையாண்டு, நம் தேவைக்கேற்ப வாழ்வாதார விசயங்களை நடைமுறைப்படுத்தி அதில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை உணர்த்தவே ஞானிகளால் சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மையக் கருத்தை நம் மனதில் உள்வாங்கி கொண்டு அதை நம் உணர்தல் மற்றும் புரிதல்கள்களுடன் மேலும் கிடத்திப்பார்க்க காலத்தால் நமக்கு சில விசயங்கள் அனுபவமாகின்றன.
மேலும், எந்த ஒரு காரியத்தின் காரணத்தை அறிய அதன் உண்மை அகம் நோக்கித் தேடவேண்டும். காரணம், நாம் காலத்தில் இருப்பதால்தான் இத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் நம்மில் பிறக்கின்றன. நாம் காலதீதனாக (காலமில்லா தன்மை) இருக்க கேள்வி பிறந்த இடத்திலேயே பதிலும் கிடைத்துவிடும், அதுவே இயல்பு. எனில் காலத்தை விட்டு விலகி நிற்க அறிவால் விளங்கிங்கொள்ள முடியாத பல பிரபஞ்ச விசயங்கள் தன்னுணர்வால் உணரப்படும். இப்படியாகத்தான் ஞானிகள் தாங்கள் உணர்ந்த விசயங்களை அட்சரங்களாகத் தொகுத்து எழுதினர்.
ஏனெனில், ஞானம் சார்ந்த விசயங்கள் அனைத்தும் அறிவால் விளங்கிக் கொள்ளமுடியாத தத்துவார்த்தங்கள் ஆகும். அவற்றை அறிவாற்கொண்டு விளக்கமளிக்க இயலாது. ஆனால், அவற்றை குருவின் அருளால் உணரலாம் அல்லது அத்தமையில் வியாபித்து அதனை நம் அகத்தின்வழி உள்நோக்கிச் செலுத்த அவையனைத்திற்கும் நமக்குள் தெளிந்த பதில் கிடைக்கும்.
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment