இதன் பொருள் விளங்காமலேயே இதனை பயன்படுத்துவோர் ஏறாளம் மற்றும் எண்ணிலடங்கா. அகங்காரம் என்றால் என்ன..? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?? அதென்ன அவ்வளவு பெரிய விசயமா..??? ஆமாம் அகங்காரம் மிகப்பெரிய விசயமே! காரணம், அகங்காரம் என்பது சக்தியின் வடிவம் (ஆங்காரி). நீங்கள் உங்கள் அகங்காரத்தை அடக்கி ஆள்கிறீர்கள் என்றால் உங்களில் இருக்கும் சக்தியை சிவத்தினுள் ஒடுங்கச் செய்கிறீர்கள் என்று பொருள்.
யாம் ஏற்கனவே எம்முடைய பதிவுகளில் கூறியுள்ளபடி எண்சான் உடம்பான இந்த ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் ஆகியவை சிவம் மற்றும் சக்தி ஆகிய இருபடி நிலைகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறது. ஏனெனில் இச்சிருஷ்டியில் இயக்கம் நடைபெற அவ்விருபடி நிலை மிக மிக அவசியம். ஒன்று ஆதாரமாகிய சிவம் (இருப்பு) மற்றொன்று ஆதரத்தைப் பற்றி இயங்கும் சக்தி (இயக்கம்). அதாவது ஸ்தூலமான பஞ்சபூதம் (நமசிவாய) சூட்சுமமாகிய நவசக்திகளுடன் (நவக்கிரகம்) தொடர்புகொள்ளும்போது அங்கு இயக்கம் நடைபெறும்.
இவ்விரண்டு தன்மைகளின் கலவைகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றமே நம்மில் ஏற்படும் பலவிதமான வேறுபாடுகளுக்கு காரணம். ஏனெனில் நாம் அனைவரும் வேறுபடுவது இந்த கலவைகளின் அடிப்படையில்தான். அதில் அவரவர் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருப்பாகிய சிவமும், இயக்கமாகிய சக்தியின் தன்மையும் வேறுபடும். இத்தன்மைகளில் ஏற்படும் மாற்றமே நம்மில் வெளிப்படும் தேக/குணபேதங்களாகும். இதில் இயக்கமாகிய சக்தி இருப்பாகிய சிவத்தில் நின்று இயங்கும். இது தவிர காரணம் (மனம்) மஹாகாரணம் (ஆன்மா) எனவும் சூட்சுமத்தில் உள்ளது.
இத்தகைய சக்தியை ஒருவர் கட்டுக்குள் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. ஏனெனில், சக்தியானவள் கொண்டெழும்பி ஆடும் தன்மை கொண்டது. அதை அடக்கி ஆளவே இத்தனை யோகங்களும் தியானமுறைகளும் நடைமுறையில் உள்ளது. ஆம், யோக சாதனை செய்தவர்கள் அனைவருமே தன்னிலிருந்து வெளிப்படும் சக்தியை தனக்குள் இருக்கும் சிவத்துடன் ஒடுங்கச்செய்து எல்லாமாகிய பரபிரம்மத்தை உணர்ந்தார்கள். அதாவது, இருபடி நிலையிலிருந்து ஒருபடித்தன்மை நோக்கிய பயணமாகும்.
பொதுவாக அகங்காரம் இல்லாமல் மாயையாகிய இவ்வுலகம் இயங்காது. யாராக இருந்தாலும் ஒரு விசயத்தை வெளிப்படுத்த அகங்கரம் மிக அவசியம். ஆனால் அதன் அளவீடு மட்டும் வேறுபடும். உதாரணமாக ஒருவர் குரு தன்மையில் இருந்து உபதேசித்தாலும் தன்னை வெளிப்படுத்த அகங்காரம் அவசியம். அதாவது, அகங்காரம் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த இயலாது.
எனில் இப்படிப்பட்ட சக்திமிகு அகங்காரத்தை அடக்கியாள்வது எவ்வாறு..? சாத்தியமா..? சாத்தியமே! காரணம், எங்கு அகங்காரமாகிய சக்தி இருக்கிறதோ அங்கே அதனை உள்வாங்கக்கூடிய இருப்பாகிய சிவமும் நிச்சயமிருக்கும். அப்படியெனில் சக்தியை சிவத்தினும் ஒடுங்கச் செய்வேண்டும். அது எவ்வாறெனில் ஞானிகளும் சித்த புருஷர்களும் பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கங்கொண்டு சக்தியை சிவத்துடன் இணைத்து சித்தியடைந்தனர். இதில் மிகவும் எளிமையான ஆரம்பநிலை அடிப்படைமுறை என்பது பக்தி மார்க்கமாகிய சரணாகதியாகும்.
அதாவது இறை துதி பாடல், எந்தேரமும் இறைவனை போற்றி வணங்குதல், அடியார்க்கு சேவை செய்தல் என்பனவாகும். அது தவிர பொதுவாழ்வில் சிகையுதிர்த்தல், பிச்சையெடுத்தல், ஆடையைக் களைதல் (கோவணம், நிர்வாணம்) என்பதுதான் சரணாகதியின் முதற்படி. காரணம் ஒருவருடைய அகங்காரம் என்பது மேற்சொன்ன மூன்று செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கும். அதாவது சிகையலங்காரம், தன்மான உணர்வு மற்றும் ஆடை அலங்காரம் ஆகியவையே நம் வெளிப்புற அகங்காரத்தைப் பற்றி நிற்கும் தூண்களாகும். அதனால்தான் இன்னமும் குருகுல சன்யாசத்தில் மொட்டையடித்து பிச்சை எடுக்க வைப்பது பிரதான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment