Monday, 28 September 2020

உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையின் சென்னை கருத்தரங்கில் யாம் ஆற்றிய உரை

முன்னுரை: ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் என்றால் என்ன, அவற்றிற்குள்ள தொடர்புகள் யாவை, அவை நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் எவ்வாறு காரணமாகின்றன என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

1.ஆன்மீகம்:

ஆன்மீகம் என்றதும் நம் மனதில் தோன்றுவது "#இறைசக்தி". அவ்விறை சக்தியே ஆன்மீகத்திற்கு பிரதானம். அதாவது நம்மை எது இயக்குறதோ அல்லது நாம் இயங்க எது காரணமாய் இருக்கிறதோ அதைத்தேடிய பயணம்தான் "#ஆன்மீகம்". இறைவன் எங்கும் இருக்கிறார், அதாவது அகத்திலும் இருக்கிறார், புறத்திலும் இருக்கிறார், எனில் எப்படி இருக்கிறார்..? "சத்" ஆகிய #ஒளியாகவும், "சித்" ஆகிய #ஒலியாகவும் ஒன்று சேர்ந்து #ஓம்காரமாகவும் மண், நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத தத்துவங்களான #நமசிவாயமாய் அகமும், புறமும், எங்கும் பரிணமித்திருக்கிறார். இங்கு "ஒளி/ஒலி" என்பது இறைவனின் சூட்சும வடிவம், அதுபோல பஞ்சபூதமென்பது இறைவனின் ஸ்தூல வடிவம். அப்படியான இறைசக்தியை புறத்தில் தேடினால் அது #பக்திமார்க்கம், மாறாக அகத்தில் தேடினால் அது #ஞானமார்க்கம். இதை ஜோதிட முறையில் கூறவேண்டுமெனில், "நான்" என்பது #தன்னிலை−1ம் பாவம், அத்தன்னிலையின் எதிர்பாவமான 7ம் பாவம், #முன்னிலை. இதில் 7ம் பாவத்திலிருந்து 12ம் பாவத்தை நோக்கிய ஆரோகணப் பயணமான அடைதல்/பெறுதல் என்பது பக்திமார்க்கம், அதுவே 7ம் பாவத்திலிருந்து 1ம் பாவத்தை நோக்கிய அவரோகணப் பயணமான துறத்தல், இருத்தல் என்பது ஞானமார்க்கம், இவையெல்லாம் தான் ஆன்மீகமும், அவை சார்ந்த விசயங்களும்.

2.ஜோதிடம்:
ஜோதிடம் என்றதும் நாம் புறத்தில் 360 பாகைகள் கொண்ட ஒரு கற்பனை வட்டத்தில் 12 ராசிகளை வரைந்து, அதில் 27 நட்சத்திரங்களை 108 நட்சத்திரப் பாதங்களாக உள்ளடக்கி, அதன்மேல் 9 கிரகங்கள் வலம் வருவதுதான் ஜோதிடமா..? இல்லைவே இல்லை, அது "வானியல் சாஸ்திரம்". எனில் எது ஜோதிடம்...? ஜோதிடம் என்பது #சார்புடைமை (relativity), அதாவது அகத்திற்கும் புறத்திற்கும் இடையேயுள்ள தொடர்புதான் ஜோதிடம். உதாரணத்திற்கு #ஆத்மகாரகன்−சூரியன்; #மனோகாரகன்−சந்திரன், எனில் புறத்திலிருக்கும் சூரியன்/சந்திரனுக்கும், அகத்திலிருக்கும் ஆன்மா/மனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? இருக்கிறது, அது யாதெனில் புறத்தில் #சூரியன்−வெப்பம்; அகத்தில் #ஆன்மா−வெப்பம், ஆக வெப்பம் என்கிற தன்மை அகமாகிய ஆன்மாவிற்கும், பறமாகிய சூரியனுக்கும் சார்புடைய காரணியாக இருப்பதால் "சூரியன்−ஆத்மகாரகரானார்". அதுபோல போல புறத்தில் சந்திரனின் சலனமாக காலமும், அகத்தில் மனத்தின் சலனமாக காலமும் இருப்பதால், இங்கு #காலம் என்பது மனதுக்கும், சந்திரனுக்கும் சார்புடைய காரணியாகி "சந்திரன்−மனோகாரகரானார். ஆக இவைதான் ஜோதிடவிளக்கமும், அதன் சார்புடைய விசயங்களுமாகும்.

ஜோதிடம் எங்கு/எப்படி செயல்படுகிறது..?

ஜோதிடம் என்பது அகத்திற்கும்/புறத்திற்கும் சார்புடமையான காரணியெனில் அது செயல்படும் இடம் என்பது உயிரோட்டமான நாமகத்தான் இருக்கவேண்டும். அதாவது, புறத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் அகத்திலும் இருக்கிறது. அதாவது புறத்தில் பாவிக்கப்படும் 12 பாவங்கள் (ராசிகள்) அகத்திலும் இருக்கிறது, மேலும் புறத்தில் 360 பாகைகளுக்குள் அடங்கியிருப்பதாக கருதப்படும் 108 நட்சத்திர பாதகங்களும், அகத்தில் 108 பிரதான நாடிகளாய் இருக்கிறது. அதுபோல, புறத்திலிருக்கும் ஒன்பது கிரங்களும், அகத்திலும் சூரிய/சந்திர கலைகளாகவும், ஆதாரச் சக்கரங்களாவும் செயல்படுகிறது. அதாவது வெளியே ஒரு கிரகம் இருக்கிறது எனில், அக்கிரகத்தின் ஒளி/மின்காந்த கதிர்வீச்சை கிரகிக்கக்கூடிய பொருள் அகத்திலும் இருந்தால் மட்டுமே அக்கிரகத்தின் தன்மைகள் நம்மில் பரிணமித்து, நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் காரணமாயிருக்குமே, தவிர சம்பந்தமில்லா அல்லது தொடர்பில்லா ஒரு பொருள் காரண/காரியமாக இருக்க வாய்பே இல்லை.

மேலும் கிரகங்களின் அதிர்வலைகள் நிலைசக்தியான (static energy) ஒளியாயால்  (photons) கவரப்பட்டு, இயங்குசக்தியான (kinetic energy) ஒலியால் (சப்த/ஸ்வரம்) இவ்வளியெங்கும் கடத்தப்படுகிறது. அப்படியான கதிர்வீச்சுகள் நம்மில் தொடர்புபடுவது ஐம்புலன்களினூடேயாகும், அதில் சுவாசமே பிரதானம். காரணம் ஒரு குழந்தை ஜனித்து, அது எடுக்கிற முதல் சுவாசமே லக்கினமாகிய உயிர்/ஸ்தானம், எனில் அச்சுவாசம் வழியாகத்தான் இப்பிரபஞ்ச விசயங்கள் நம்மில் ஊடுருவி, நம் உடலின் ஆதாரச் சக்கரங்களில் கடைதலுண்டாகி, நாடிகளின் வழியே உடலெங்கும் பரிணமிக்கிறது. அதுபோலவே, கிரகங்களின் பார்வை என்பதும் நம்முள் இருக்கும் அப்பாவங்களின் தன்மைகள், அது தொடர்புடைய கிரக கதிர்வீச்சுக்களை, சுவாசத்தால் உட்கிரகிக்கப்படு செயல்படுகிறதே, தவிர புறத்தில் எந்தக்கிரகமும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதுமில்லை, அதனால் நமக்கும் எந்தப் பயனுமில்லை. இப்படியாகத்தான் அனைத்து கிரகதன்மைகளும் நம்மில் உட்கிரகிக்கப்பட்டு செயல்படுகிறது.

#பரிகாரம்:

நாம் காலத்தில் பயணிப்பதால் பரிகாரம் என்பது காலத்தை உள்ளடக்கியது. அக்காலமானது நம்மில் கர்மாவாய் பரிணமித்திருக்கிறது. அதாவது, கர்மா என்பது  நமக்கு விசயமாகும்போது அது காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஏனெனில், காலத்திற்கு அப்பாற்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் இவ்வுலகில் எதுவும் இல்லை. ஆக, காலமாகிய கர்மாவின் பரிமாணங்களை மூன்று வகையாகச்சொல்லாம், அவை

1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய கர்மா)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)

இதில் சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய  ஆகாமியத்தில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் தான் உள்ளது, தவிர நம்மில் செயல்படும் பரிகாரம் என்பது நிதர்ஷனம். உதாரணம், ஒருவருக்கு உடலில் விட்டமின் A குறைவு எனில், விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் நமக்கு மிக அவசியமாகிறது.

அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் பலவிதமான மாற்றுக்கருத்து உண்டு. அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை  பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆனால், பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.

1. சஞ்சீதம்/ஜாதகம் − இது கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை ஸ்தூலம் அழியும் வரை யாராலும் மாற்ற இயலாது

2. பிரார்ப்தம்/கோள்சாரம் − இது சஞ்தீதத்தால் விதிக்கப்பட்டதன் தற்சமய நிகழ்வு ஆகும்.

3. ஆகாமியம் − தசா/புக்தி/அந்தரம், இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்.

ஏனெனில் தசா, புக்தியப் பயன்படுத்தாமல் எதிர்காலப் பலன்களைச் சொல்லமுடியாது, எனில் தசா/புக்தி என்பது யாது..?

தசா/புக்தி என்பது நம் அகத்தின் நாடியாகும். அதாவது, நம் ஜீவனானது நம் ஸ்தூலத்துடன் பந்தனப்பட்டு நாடிகளாய் இயங்குகிறது, இதுவே நாடிபந்தனமாகும். இங்கு, ஜீவனாகிய−ஆன்மா என்பதும், ஜீவநாடியாகிய−நாடிபந்தனம் (உடலுடன்/ஆன்மா) என்பதும் வேறு வேறு என்பதன் புரிதலும் மிக அவசியம். இப்போது ஒருவருக்கு புதன்/திசை நடக்கிறது என்றால் அவருக்கு புதன் நாடி பிரதானமாகவும், சனி/புக்தி நடக்கிறது எனில் அதனைத்தொடர்ந்து சனி நாடியும், அப்படியாக ஏனைய கிரங்களின் நாடிகளும் உடலில் ஓடுகிறது என்று அர்த்தம்.

அதாவது, விம்சோத்தரி தசையில் 120 ஆயுள் கணிதம் எவ்வாறு வந்தது..? ஆயுள் எனில் சுவாசமும் இருக்கவேண்டும்தானே, அப்போ சுவாசமெனில் நாடிகளின் இயக்கங்களும் அங்கு வந்துவிடும்தானே..? எனவே நாம் செய்யும் அத்துனை விசயங்களையும் நாடிகளால் மாற்றியமைத்து, நமக்குத் தேவையான தன்மையை நம் உடலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும்தானே...? இதுதானே பரிகாரம் என்பதும்..? மேலும் மேற்கூறிய பிரபஞ்ச விசயங்கள்தான் நாடிகளில் கடைதலுண்டாகி உடலில் உட்கிரகிக்கப்படுகிறது, அற்றின் ஏற்ற/இறக்கங்கள்தானே நம் உடலின் தன்மையில் பல மாற்றங்களை (நோய்) உண்டுபண்ணுகிறது, ஆக கோவில்களில் தீர்மானிக்கப்ட்டிருக்கும் பஞ்சபூத/நவக்கிரகத் தன்மையை உட்கிரகித்து நாடிகளின் தன்மையையும் மாற்றியமைக்க முடியும் என்பது நிதர்ஷனமான உண்மை.

உதாரணமாக நாம் நின்றால், நடந்தால், படுத்தால், ஓடினால் நாடிகளும் மாறி ஓடும், அது போல குளிர்ந்த நீரைப் பருகும்போது ஒருவித நாடியும், வெந்நீரைப் பருகும்போது வேறுவிதமான நாடியும் மாற்றி ஓடுகிறது என்றால், நாம்/நமக்குத்தேவையான விசயங்களை நாடிகளில் நிலைநிறுத்தி, நம் உடலின் தன்மையை மாற்றியமைக்க இயலும்தானே, ஆக பரிகாரம் செயல்படுகிறதா/இல்லையா என்கிற ஐயம் நமக்கு ஏற்படக்கூடாது, தவிர நாம் கூறும் பரிகாரமென்பது சரியானதா என்பதுதான் இங்கு மிக முக்கியம்.

#முடிவுரை: இப்போது பாருங்கள் அகம் மற்றும் புறத்தின் சூட்சும விசயமான ஒளி/ஒலித் தன்மைகளும், ஸ்தூலமான பஞ்சபூத/நவக்கிரகத் தன்மைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது எனில் நான் மேற்கூறிய ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபடுகிறது என்பதையும் அறியவேண்டும், இச்சிருஷ்டியும் அப்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஜீவன் முக்திக்கான ஜாதக அமைப்பு

இப்பிறவியிலேயே பிறப்பறுக்கும் ஜாதக அமைப்பாக லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் முக்தி என ஜோதிடத்தில் கூறுவர். ஆனால், 12ல் கேது இருக்கும் அனைவரும் இப்பிறப்பிலேயே முக்தியடைவர் எனக் கூறமுடியாது. ஆனால், முக்திக்கான தூரத்தை நெருங்கிவிட்டனர் எனலாம். அதாவது, அடுத்த சில பிறப்பிற்கு பிறகு ஜீவன் முக்தியடைய வாய்புண்டு. இருப்பினும், எம்மாதிரியான ஜாகத அமைப்பு இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி என்பதைக் காணலாம்!

1. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் தனது சுய சாரமான அஸ்வினி/மகம்/மூலத்தில் இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

2. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் அவ்வீட்டு அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

3. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் அதிபதியின் சாரத்தில் எங்கிருந்தாலும் இப்பிறவியிலேயே முக்தி (யோகிகள் மற்றும் ஞானிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பைக் காணலாம்)

4. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கர்மக்காரகன் சனியின் சாரமான பூசம்/அனுஷம்/உத்திரட்டாதியில் அல்லது காலனுக்கு 12ம் அதிபதி குருவின் சாரமான புனர்பூசம்/விசாகம்/பூரட்டாதியில் இருந்தால் இப்பிறவியில் முக்தி

5. லக்கினத்தின் மோட்சாதிபதி ஞானக்காரன் கேது அல்லது கர்மக்காரகன் சனியின் சாரத்தில் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

6. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் குரு அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

7. கால புருஷனுக்கு தர்ம/கர்மாதிபதிகளான குருவும் சனியும் லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

8. ராசியிலும் நவாம்சத்திலும் கேது லக்கினத்திற்கு 12ம் வீட்டில் இருந்து வர்கோத்தமமாக இப்பிறப்பிலேயே முக்தி

9. சனியும் சந்திரனும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே ஜீவ முக்தியாம்!

இதுபோல இன்னும் பல!!!

#குறிப்பு:  மேற்கண்ட ஜாதக அமைப்பை லக்கினத்திற்கு மட்டுமே பார்க்கவேண்டுமே, தவிர ராசிக்கு பார்க்ககூடாது. ஏனெனில், ராசியான உடல் இறப்புக்கு மட்டுமே விசயம். அதனால், ஜீவன் முக்திக்கு லக்கினத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும்!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சனியின் சாரத்தில் சூரியன் இருந்தால்

சனியின் நட்சத்திரமான பூசம் / அனுஷம் / உத்திரட்டாதியில் "சூரியன்" இருக்கப் பிறந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதைப் பெற்றிருந்தாலும் இரத்த பந்த உறவுகளின் நயவஞ்சக துரோகம், தாமத திருமணம் அல்லது பற்றற்ற கணவன் / மனைவி, தொடர் உடல் உபாதைகள், ஜென்ம விரோதிகளின் தொல்லை மற்றும் குடும்ப சொத்து, வழக்குகள் மற்றும் அவமானங்கள் போன்றவற்றிலிருந்து ஒருபோதும் விலகி நிற்க இயலாது. இது ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் இருக்கும் பாவகத் தொடர்புகளைப் பொறுத்து அதற்கான பலன்களை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டுமென்பது இப்பிறப்பின் பிராப்த கர்மாவாகும்!!!

பரிகாரங்கள்

1. பேரளம் − திருமீயச்சூர் மேகநாதர் / லலிதாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை தரிஷனம்

2. சென்னை − வியாசர்பாடி / ரவீஸ்வரன் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

3. கும்பகோணம் − திருமங்களக்குடி / சிவசூரியனார் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

குருவின் சாரத்தில் சூரியன்

சமுதாயத்தில் நன்மதிப்பும், அந்நியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் குருமாரர்களின் அன்பும் ஆசியும், நல்ல கற்பனைத் திறனும், தெளிவான சிந்தனையும், களிறு போன்ற ஞாபக சக்தியும் உண்டாகும். இது தவிர, வேத சாஸ்திர மந்திரங்களில் ஆர்வமும், சிவ தீட்சையும், வாக்கு பலிதமும், தாமத் திருமணமும், இல்லறத்தில் நல்லறமும், மற்றவர்களை எளிதில் நம்பிவிடும் குணமும் இருக்கும். மேலும், பிராமணர்கள், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு, குறுகிய  ஆன்மீகப் பயணங்கள் மற்றும் உபதேசங்கள் போன்ற தன்மைகள் நிலவும். மேலும், தாய் தந்தையரின் அன்பும் ஆதரவும், தாய்வழி அசையும் / அசையா சொத்துக்கள் கிடைக்கப்பெறும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

யோகியர் ஜாதகம் (ஜோதிடர்களுக்கான பதிவு)

ஒரு ராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் வாழ்வில் பல துயரங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிடும். இவர்களின் வாழ்வாதாரம் மற்றவர்களைப் போன்று சாதாரணமாக அல்லாமல், அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும். இதுதவிர, வாழ்நாளில் ஒருமுறையாவது மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியிருப்பார்கள் அல்லது வாழ்வின் உச்சத்திலிருந்து அடிமட்டத்திற்கு வந்திருப்பார்கள். சிலருக்கு, சகல வசதிகள் இருந்தும் திடீரென நடு வீதிக்கு வரும் நிலைமைகூட ஏற்பட்டுவிடும். சிலரோ, பிறந்ததிலிருந்து கடும் துன்பங்களை மட்டுமே சந்திந்திருப்பார்கள். ஆனால், இத்தனை துன்பங்களையும்,  வலிகளையும் எதிர்கொள்ளும் இவர்கள் யோகியாவர். பெரும்பாலும் யோகிகளுக்கும், ஞானிகளுக்குமே இம்மாதிரியான அமைப்புகள் இருக்கும். அதனால், இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது மற்ற ஜாதகங்களைப் போல மேலோட்டமான ஜோதிட விதிகளைக் கொண்டு அவசர அவசரமாக பலன்கூறினால் அது முற்றிலும் பொய்த்துவிடும். தவிர, கூட்டு கிரகங்களின் சேர்க்கையை, அவை நின்ற பாவம், ஏறிய சாரம் மற்றும் பாகைகள் முறையே கிரக யுத்தம், அஸ்தங்கம் மற்றும் நவாம்சபாதையில் அக்கிரகங்களின் இருப்பு ஆகியவற்றை மிகவும் நுட்பமாய் ஆய்வு செய்து பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

மந்திரவுடல்

இப்பிரபஞ்சம் முழுவதும் ஒளியாலும், ஓசையாலும் நிரப்பப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தின் அங்கமான நமது உடலும் மூல மந்திரமான ஓம்கார நாதத்தால் கட்டப்பட்டுள்ளது. அதுவே இப்பிரபஞ்ச பேராற்றலின் உயிர்நாடியுமாகும். இருப்பினும், இம்முலத்திலிருந்து விரிந்த கிளை மந்திரங்கள் ஏராளம். அதாவது, நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு விதமான பீஜத்தை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும். அதையே நாம் உடலின் நாடிகள் எனவும் கூறுகிறோம். அப்படியாக நமது உடலில் இருந்து வெளிப்படும் ஒட்டுமொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 72,000. அதில் பிரதானம் 108, இவை அனைத்தும் இயங்க காரணமாய் இருக்கும் மூலம் ஒன்றாகும். இப்படியாக பஞ்ச பூதங்களுடன் / ஒலி வடிவம் இணையப்பெற்று இயங்குவதாலேயே வேத சாஸ்திரம் என்பது மந்திர வடிவங்களாய் இருக்கிறது. அவை நம் உடலுக்கு விசயம். உடல் உயிருக்கு விசயம்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

திரிகோணாதிபதிகள் (1,5,9)

ஒரு ஜாதகத்தின் Pilot என்று அழைக்கப்படும் லக்கினாதிபதியும் Co-pilots என்றழைக்கப்படும் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் வலுவாக இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு 1,5,9ம் பாவங்களையும் ஏதாவதொரு விதத்தில் தொடர்புகொண்டு திசை நடத்தினால் அது மிகவும் வலிமையான ஜாதகமாகும். அப்படியான ஜாதக அமைப்புடைய ஜாதகர் வாழ்வில் அனைத்து சுக போகங்களை அனுபவித்து சமுதாயத்தில் பேரும் புகழுடன் திகழ்வார். இதில் 1,5,9 அதிபதிகள் எந்த அளவிற்கு சூட்சும மற்றும் சுபத்துவ வலிமை பெற்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே பலன்களும் இருக்கும். இதில் லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது சிறப்பாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பாவ புண்ணியம்

முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகள் சஞ்சீத கர்மாவாக நமது முன்னோர்கள் மற்றும் பெற்றோர் வழியாக இப்பிறப்பில் நமக்கு பிராப்த கர்மாவாக வரும். அதில் பாவம் மற்றும் புண்ணியம் என இரண்டுமே அடங்கும். அதில், நாம் என்ன விதமான பாவ / புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பதை நமது லக்கின பாவம் மூலம் அறியலாம். அதாவது, 12 லக்கினங்களும் சில குறிப்பிட பாவங்கள் வழியாக நவக்கிரகங்களின் மூலம் நம் பாவ / புண்ணிய கர்ம வினைகளைக் கடத்தும். உதரணமாக, கீழ்க்கண்ட லக்கினங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பாவங்கள் வழியாகத்தான் பாவ / புண்ணிய கர்மாக்கள் நமக்கு வந்து சேரும். அதாவது, அந்த குறிப்பிட்ட பாவங்களே ராசியாகவோ அல்லது ஆட்சி / உச்ச / நீச கிரகங்கள் இருக்கும் பாவங்களாகவோ அல்லது அப்பாவாதிபதிகள் உச்ச / நீசமாகவோ அல்லது அப்பாவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தோ அல்லது ராகு / கேதுக்கள் இருந்தோ இப்பிறப்பின் பிராப்த கர்மாவைச் செயல்படுத்தும். ஆக, இப்பிறப்பில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அப்பாவங்களின் நன்மை / தீமைகளை சார்ந்தே செயல்படும் என்பது எமது ஜோதிட அனுபவத்தில் யாமறிந்த உண்மையாகும்.

மேஷம் / 2,4,5,7,8,10,11
ரிசபம் / 3,4,5,6,7,9,11,12
மிதுனம் / 4,6,7,10,11
கடகம் / 3,6,9,11,12
சிம்மம் / 1,3,4,9,10
கன்னி / 1,3,7,8,10,11,12
துலாம் / 2,3,6,7,8,11,12
விருச்சிகம் / 2,3,4,5,6,9,11
தணுசு / 2,4,6,7,8,9,11
மகரம் / 2,4,7,8,10,11
கும்பம் / 2,3,9,10,11,12
மீனம் / 1,4,5,7,10,11,12

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பூரணத்துவம்

நிறைவு அல்லது முழுமை அல்லது பூரணம் என்பது புத்தியால்/அறிவால் படித்தறிந்து அல்லது பொருளறிந்து அறியக்கூடிய புறவிசயம் அன்று

இல்லையெனில் முழுயடைந்தவர்கள் அட்சரமாக எழுதி வைத்த பாடல்களை அறிவால் பொருளறிந்த அனைவரும் அல்லது யாரேனும் ஒருவராவது முழுமையடைந்திருக்க வேண்டும்

ஆனால் இதுவரை அப்படியேதும் நடக்கவில்லை, ஏனெனில் அவை முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விசயம் மட்டுமே

காரணம் ஒருவரின் உணர்வுநிலையை அறிவு நிலையாக்கி, அதை மற்றொருவரின் உணர்வு நிலையாக்குவது என்பது சாத்தியமே இல்லை. இதன்படியே ஞானிகளும் கருத்தில் வேறுபடுகிறார்கள்

ஏனெனில அறிவும் உணர்வும் எதிரெதிர் துருவங்கள்

எனவே அவர்வர் உணர்தல் அவருக்கு விசயம், தவிர முரண்பாடு என்பது கட்டமைப்புத் தன்மைகளின் (குணபேதம்) வேறுபாட்டால் உண்டாவதேயாகும்

எனவே, நாம் கண்டது, கேட்டது, படித்தது, விவாதித்தது, சுயமாக உணர்ந்தது ஆகிய அனைத்தின் புரிதல் எல்லாமே அறிவாக மட்டுமே வெளிப்படும், தவிர அது முழுமையாகாது

காரணம், எப்போதெல்லாம் ஒரு கருத்து வெளிப்படுகிறதோ அது அறிவேயாகும் ஏனெனில் அறிவு தன்னை வெளிப்படுத்திக் காட்டி நிருபணம் தேடும். ஆனால், ஞானத்திற்கு எவ்விதமான வேத விளக்க நிரூபணங்கள் தேவைப்படாது

அதாவது நான் நானாக இருக்கிறேன் என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை

அதாவது நாம் என்னதான் வேத வியாக்கான விளக்கங்கள் கூறினாலும் அவையனைத்துமே அறிவு சார்ந்த விசயங்களேயன்றி பூரணமாகாது

இதில் விசயம் என்னவெனில் அவரவர் நிலைப்பாட்டிற்கு தத்தம் கருத்துக்கள் பிரதானமாக இருக்கும் ஆனால் இவை அனைத்துமே அவரவர் அனுபவ அறிவே தவிர அது பூரணமாகிய ஞானமாகாது

காரணம் ஞானம் என்பது தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் காட்டாது மேலும், அது மற்றவரின் அறிவு/உணர்வு நிலையோடு முட்டி நிருபிக்கவும் செய்யாது. 

ஆக அறிவே அகங்காரத்தைக் கொண்டெழுப்பி தன்னை வெளிப்படுத்துவதொடு மட்டுமின்றி நிருபணம் தேடி ஒன்றறொடொன்று முட்டி மோதும்

உதாரணமாக,

ஒரு செடி செடியாக இருக்கிறது அது மரகமாகவில்லை என்றும்; மரமானது பூக்கவில்லை என்றும்; பூத்திருக்கிறது ஆனால் காய்க்கவில்லை என்றும்; காய்த்திருக்கிறது ஆனால் கனியவில்லை என்றும்; கனிந்திருக்கிறது ஆனால் கனியை உதிர்க்கவில்லை என்றும் தன்னறிவால் விளக்கலாமே தவிர

செடி மரமாகவேண்டும் என்றும்; மரம் பூக்க வேண்டும் என்றும்; அது காய் காய்த்து கனிய வேண்டும் என்றும் நிர்பந்திக்க முடியாது

காரணம், நிகழ்வில் அது என்ன நிலையில் இருக்கிறதோ அதுவே அதற்கு "முழுமை அல்லது பூரணம்"

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

சிருஷ்ட்டி (1,5,9)

இறை அல்லது இருப்பு அல்லது தன்னிலையாகிய ஒருமை; ஐந்தாகிய பஞ்சபூதங்கள் மற்றும் ஒன்பதாகிய நவக்கிரகங்கள் ஆகிவற்றின் முழுமையே நாம் மற்றும் நம் இயக்கத்தின் மூலமாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

தன்னுணர்வு

நம் உடலில் ஆத்மாவானது நிலைபெற்று இருக்கும்வரை நம் உணர்வு நிலை என்பது மாறாதது. அதையே பிரக்ஞை என்று கூறுவார்கள். காரணம் ஆத்ம ஒளியானது உடலுடன் சேர்ந்தால்தான் அங்கு உணர்வே பிறக்கும், தவிர ஆத்மாவிற்கு தனிப்பட்ட உணர்வு நிலை என்பது கிடையாது.

அப்படியிருக்க இங்கு உடலும் ஆத்ம ஒளியைத் தொடர்புகொள்ளும் ஒரு கருவியாக இருந்து நமக்கு உணர்வு நிலை உண்டாக ஓர் காரியப்பொருளாய் இருக்கிறது. அப்படியான தன்னுணர்வு நிலைக்கு (விழிப்பு நிலை) தடையாய் இருப்பது நம் மனமேயாகும். 

அந்த மனம் என்பதே இருப்பின் (ஆத்மா) சலனமேயன்றி வேறில்லை. ஆனால் அதை அது அறியாமல் அது எங்கோ வெளியே இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தை ஐம்புலன்களினூடே உண்டுபண்ணி, காண்பதெல்லாம் நிஜம் எனக் கொள்கிறது. ஆக சலனமாகிய மனம் அது உருவான மூலத்தில் நிலைபெறும்போது நம் உணர்வுநிலையில் இருக்கிறோம் என்கிற விழிப்புநிலை உண்டாகிறது.

உதாரணமாக, சூரிய ஒளியை யாராலும் நேரடியாகக் கண்ணால் காண இயலாது, தவிர அது ஏதாவது ஒரு திடப்பொருளில் பட்டு பிரதிபலித்தால் மட்டுமே அதை நாம் ஒளி என்று உணர்கிறோம். அதுபோலவே, நம் ஆன்மா உடலுடன் சேர்ந்து உணர்வுகள் பிறக்கிறது. அது எவ்வாறு பலவிதமான உணர்வு நிலைகளாக மாறுகிறது என்பதை எம் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போமாக.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

சித்தம் (அரூபம்):

காரணமான ஆத்மாவிற்கும், காரியமான உடலுக்கும் நடுநிலைக் காரணியாய் இருக்கும் அந்தக்கரணமே "சித்தமாகும்". இதுவே #மனமானது நினைப்பதற்கும், #புத்தியானது நிச்சயிப்பதற்கும் மற்றும் #அகங்காரமானது கொண்டெழுப்புதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. இவற்றின் முழுமையே தெளிந்த நீரோடையான அறிவேயாகும். இதில்தான் ஆத்மாவிலிருக்கும் ஜென்மாதி ஜென்ம கர்மப் பதிவுகளும், தலைமுறை தலைமுறைகளாய் ஸ்தூலத்தில் (உடல்) பதிந்திருக்கும் மரபணு விசயங்களும் ஒன்றாய் பரிணமித்திருக்கும் ஆழ்நிலைப் பதிவுகளாகும் (Sub-conscious memory).

உதாரணமாக:

1. ஆத்மா−Super conscious or Tertiary memory
2. சித்தம்−Subconscious or Secondary memory
3. மனம்−Conscious or Local or Primary memory

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஐவகை அக்கினிகள்

நம் உடலின் ஆத்மாவானது ஐந்து வகையான வெப்பத்தை (சூட்டை) தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவை,

1.மோக அக்கினி −அடைய முற்படுவது
2. போக அக்கினி −பசி உணர்வு
3. காம அக்கினி −அடைந்து வெளிப்படுத்துவது
4. தாப க்கினி −அடைந்ததை மீண்டும் அடையத்துடிப்பது
5. ஞான அக்கினி −ஆனந்த நிலையில் லயித்திருப்பது

இவை சிவத்தின் ஐந்து தன்மைகளாகும்:

1. ந/மோகம் (மண்ணில் தீ) − #ருத்ர
2. ம/போகம் (நீரில் தீ) − #அர்த்தநாரீ
3. சி/காமம் (நெருப்பில் தீ) − #காலபைவ
4.வா/தாபம் (காற்றில் தீ) − #நடராஜ
5. ய/ஞானம் (ஆகாயத்தில் தீ) − #சதாசிவ

இவற்றின் முழுமையே ஆத்மவாவின் தன்மையாகும். இங்கு,

"மோகம்" என்பது ஒரு பொருளை அல்லது செயலையை நோக்கிய ஆசை, தூண்டுதல் அல்லது தீவிரம் எனக்கொள்ளலாம். 

"போகம்" என்பது தூண்டப்பட்ட விசயத்தை செயல்படுத்துவதாகும்.

"காமம்" என்பது அச்செயலால் உண்டான தன்மையை அடைந்துணர்ந்து வெளிப்படுத்துவது ஆகும். உதாரணமாக நாம் எச்சிலைக் காரி உமிழ்வதும், சுக்கிலத்தை வெளியேற்றுவதும், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் அனைத்து வெளிப்பாடுளுமே காமமேயாகும்.

 "தாபம்" என்பது மேலே பெற்ற அனுபவங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அடைய முற்படுவது.

"ஞானம்" என்பது அனைத்தின் பூரணமாகிய ஆனந்த நிலையில் லயித்திருப்பதாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

லக்கினம் (உயிர் ஸ்தானம்):

1. கிரேதாயுகத்தில் ஆணும்/பெண்ணும் புணரும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

2. திரேதாயுகத்தில் கரு உண்டாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

3. துவாபரயுகத்தில் சிசுவின் சிரசு ஜனனமாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

4. கலியுகத்தில் ஜனித்த சிசுவின் முதல் சுவாசம் (அழுகை) லக்கினமாக எடுக்கப்படுகிறது

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நிசப்தம் (அமைதி):

அமைதி என்கிற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அது நம் புலனுக்கு மட்டுமே விசயம், தவிர பரந்து விரிந்த இவ்வுலகம் அமைதியாய் இருப்பதாகத் தோன்றினாலும் அதை உற்று நோக்கினால் இரைச்சல்கள் இருப்பதை உணரலாம். ஏனெனில் அமைதி என்பதே இரைச்சலுடன் கூடிய சப்தமாகும். காரணம் இப்பிரபஞ்சம் என்பது ஓசை வடிவானது. அது சப்தத்தால் எங்கும் நிரப்பப்பட்டுள்ளது. எனவே அப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான நமக்கும் இது பொருத்தும். இத்தன்மையை ஆழ்ந்த தியானத்தில் நன்றாகவே உணரலாம்.

உதாரணமாக, எக்காளம் என்கிற மீயொலியையும் ( >20,000dB), உயிரோசை என்கிற சிற்றொலியையும் ( <20dB) நம் செவியால் உணர இயலாது. அதாவது குறிப்பிட்ட ஒலி அளவீடுகளுக்குள் (20−20,000dB) இயங்கும் சப்தங்களை மட்டுமே நம் செவியால் உணர இயலும். அதனால் உணர இயலாத சப்தங்கள் நிசப்தமாத் தெரியுமே, தவிர அது நிசப்தமாகாது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவருளும் திருவருளும்

நாம் அனைவருமே இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் புரிதல் மற்றும் உணர்தலின் கோணம் வேறுபடுகிறது. இதற்கு நம் உடலின் கட்டமைப்பு, உண்ணும் உணவு மற்றும் நாம் வாழும் இடத்தின் தன்மையே மூலகாரணங்களாகிறது. இங்கு புரிதல் என்பது மனம், புத்தி சார்ந்தும், உணர்தல் என்பது தன்னிலையின் ஆத்ம விசாரத்தைப் பொறுத்தும் இருக்கும்.

மேலும், எந்த ஒரு செயலையும் வெளிப்படுத்த அகங்காரம் என்பது அவசியம். அதாவது, வெளிப்படுத்துதல் எல்லாமே ஒருவிதமான அகங்காரமே. ஆனால், அது எதிர் நிலையில் இருப்பவரை பாதிக்காத வண்ணம், அதாவது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பின் அவ்விசயம் அந்த நபரால் உள்வாங்கப்பட்டு அங்கு உணர்தல் மட்டுமே பிரதானமாயிருக்கும். தவிர, ஒத்துப்போகவில்லையெனில் விலக்கு விசை உண்டாகி அகங்காரம் மட்டுமே கொண்டெழுப்பபடும். அதானாலேயே ஞானிகள் தானுணர்ந்த விசயங்களை விவாதிக்காமல் குருவழி உபதேசமாகத் தந்தனர்.

அதாவது, ஒருவரின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட விசயங்களை எவ்வளவுதான் விளக்கிக்கூறினாலும் அதை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. காரணம் சொல்பவர் & கேட்பவர் இருவேறான தன்மையில் இருப்பின் விசயங்கள் ஒத்துப்போகாது. அதை உணர்த்தவே குரு என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் அரூபமாகவோ ஸ்வரூபமாகவோ இருந்து எதார்த்தத்தின் இயல்பை உணர்த்த காரணமாகிறார். இதுகூட அவரவர் பூர்வபுண்ணியக் கர்மாவைப் பொறுத்தே அமையும்.

அதாவது, யாரால் யாருக்கு எம்மாதிரியான உண்மையை உணர்த்த வேண்டுமென்பதும் கர்மாவின் தீர்மானமே. அப்படியாக அனைவருக்கும் ஏதோ ஒரு வழியில் அக மற்றும் புற குருமார்கள் அமைந்து விடுகின்றனர். சிலருக்கு தன் மனமே சற்குருவாய் இருந்து தம் சித்த கர்மாவை வழிகாட்டுகிறது.

ஆகமொத்தம் கால சலனத்தின் பிடியிலிருக்கும் நம் அனைவரும் எப்படி அதனை கையாண்டு, நம் தேவைக்கேற்ப வாழ்வாதார விசயங்களை நடைமுறைப்படுத்தி அதில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை உணர்த்தவே ஞானிகளால் சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மையக் கருத்தை நம் மனதில் உள்வாங்கி கொண்டு அதை நம் உணர்தல் மற்றும் புரிதல்கள்களுடன் மேலும் கிடத்திப்பார்க்க காலத்தால் நமக்கு சில விசயங்கள் அனுபவமாகின்றன.

மேலும், எந்த ஒரு காரியத்தின் காரணத்தை அறிய அதன் உண்மை அகம் நோக்கித் தேடவேண்டும். காரணம், நாம் காலத்தில் இருப்பதால்தான் இத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் நம்மில் பிறக்கின்றன. நாம் காலதீதனாக (காலமில்லா தன்மை) இருக்க கேள்வி பிறந்த இடத்திலேயே பதிலும்  கிடைத்துவிடும், அதுவே இயல்பு. எனில் காலத்தை விட்டு விலகி நிற்க அறிவால் விளங்கிங்கொள்ள முடியாத பல பிரபஞ்ச விசயங்கள் தன்னுணர்வால் உணரப்படும். இப்படியாகத்தான் ஞானிகள் தாங்கள் உணர்ந்த விசயங்களை அட்சரங்களாகத் தொகுத்து எழுதினர்.

ஏனெனில், ஞானம் சார்ந்த விசயங்கள் அனைத்தும் அறிவால் விளங்கிக் கொள்ளமுடியாத தத்துவார்த்தங்கள் ஆகும். அவற்றை அறிவாற்கொண்டு விளக்கமளிக்க இயலாது. ஆனால், அவற்றை குருவின் அருளால் உணரலாம் அல்லது அத்தமையில் வியாபித்து அதனை நம் அகத்தின்வழி உள்நோக்கிச் செலுத்த அவையனைத்திற்கும் நமக்குள் தெளிந்த பதில் கிடைக்கும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நாமும் ஜோதிடமும்

ஜோதிடம் என்பது "சார்புடைமை" (relativity). அதாவது, அகத்திற்கும்/புறத்திற்கும் உள்ள தொடர்புதான் ஜோதிடம். இதில் நாம் என்பது தன்னிலை, 1ம் பாவம்; நமக்கு முன்னிலை என்பது 7ம் பாவம். அதாவது, 1 லிருந்து 7 வரை நம்மைச் சார்ந்த விசயங்கள், ஆனால் 7 லிருந்து 12 என்பது நாம் தொடர்புகொள்ளும் விசயங்கள். ஆக ஜோதிடத்தில் 12 பாவங்கள் என்பது அகத்திலும்−புறத்திலும் தொடர்புபட்டு, காலத்தால் #கர்மாக்களாய் பரிணமித்திருக்கிறது. அவை:−

1. சஞ்சிதம்−1,4,7,10 (Past and fixed)
2. பிரார்ப்தம்−2,5,8,11 (Present and practicing)
3. ஆகாமியம்−3,6,9,12 (Future and applicable)

ஜோதிடமானது ஐம்புலனினூடே (கண், காது, முக்கு, வாய், சருமம்) நம்மைத் தொடர்புகொண்டு நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியமாய் இருக்கிறது. இங்கு கிரகங்களாகச் சொல்லப்படும் #ராகு/#கேது என்பவை "நேர்மின் மற்றும் எதிர்மின்" தன்மையுள்ள இருபடி−மூலங்கள். மேலும், #சூரியன்−#சந்திரன் என்பவை ஆத்மா−மனமாய், ராஜா−ராணியாய், சிவம்−சக்தியாய், இடகலை−பிங்கலையாய், புரோட்டான்−எலக்ட்ரானாய் உள்ளும்−புறமும் பிரதானமாக இருந்து, செயல்பட்டு, அதனுடன் கூடிய ஆதார சக்கரங்களாய் குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரனும் இயங்குகின்றன. இவை அனைத்துமே அகத்திலும்−புறத்திலும் இருந்து நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியகங்களாகச் செயல்படுகின்றன.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், உடலில் சுவாசம் என்கிற உயிர்காற்று இருக்கும் வரை ஜோதிடம் என்கிற சார்புடைமை வேலை செய்யும்👍அதாவது, சுவாசம் இருந்தாலே அங்கு ஜோதிடம்தான் (நாடிகளில்−நவகிரகங்களின் நாட்டியம்)  பிரதானமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்🙏 

ஒருவன் இப்படித்தான் உதாரண புருஷனாய் இருக்க வேண்டும் என்பதற்கு அவனுடை 1,5,9 (லக்கினம்/பூர்வபுண்ணியம்/பாக்கியம்) பாவங்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உதாரணம் #ஶ்ரீராமர்; ஆனால் ஒருவன் எப்படி இருக்க கூடாதென்பதற்கு அவனுடைய 3,6,11 ஆகிய பாவங்களின் ஸ்திர தன்மையே காரணமாகும், இதற்கு உதாரணம் #ராவணன்.

இதைத்தான் "ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்" காமம்−குரோதம்−லோபம் (3,6,11) இருப்பவன் தன்னிலை (சத்தியத்தை)  மறந்து, அழிவை சந்திப்பான் எனக்கூறியுள்ளார்🙏

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மகரம் (பொதுப்பலன்):

1. நீதிதேவனான சனிபகவானின் மகரத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்

2. காலபுருஷனுக்கு மகரம் கர்ம (ஜீவனம்) ஸ்தானமாக வருவதால் மகரத்தான் கடும் உழைப்பாளிகள், பிறரின் வளர்ச்சிக்கு தன்னை பலிகடாவாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்

3. பிரகஸ்பதி குரு நீசமாகும் மகரத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் வாழ்வின் ஒரு பகுதியில் ஏமாளிகளாகவும், பிறப்பிலேயே அதீத ஆன்மீக சிந்தனையை அடித்தளமாகவும் கொண்டிருப்பர்

4. செவ்வாய் உச்சமாகும் மகரம் அழுத்தம், பிடிவாதம் போன்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தீவிரமாகச் செய்து முடிக்கும் மனோவேகம் கொண்டது

5. சூரிய/சந்திரர்களின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் (அபிஜித்) கொண்ட மகரத்தான் சொல் மற்றும் செயலில் வசீகரமும், சாஸ்திர வித்தைகளில் சாதுர்யமும், எதிரிகளை எளிதில் வென்று சிம்ம சொப்பனமாய்த் திகழும் பேராற்றலையும் கொண்டவர்கள்

6. ஆரோகண/ஆதாரச்சக்கரத்தில் ஆக்னாவான மகரம் மெய்ஞானத்தின் அடிநாதமாக இருப்பதால் உலகப் புரிதல், இயற்கைப் புரிதல் மற்றும் சகலசம்பத்துகளில் ஞானப் பிளம்பாகும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

கும்பம் (பொதுப்பலன்):

1. பூரிபூரண சாத்வீக ராசியான கும்பத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தர்க்கம் மற்றும் விவாத விரும்பிகளாக இருப்பினும் நிதானம், பொறுமை மற்றும் தன்னடக்கம் ஆகிய சாத்வீக குணங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

2. காலபுருஷனுக்கு கும்பம் லாபம் மற்றும் பாதகஸ்தானமாக வருவதால் பெரும்பாலும் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் வாழ்வில் ஏமாற்றம், தொழிலில் கடும் வீழ்ச்சி மற்றும் பல கசப்பான அனுபவங்களைக் கடந்து எதிர் நீச்சல் போட்டு, இறுதியில் சுயமுற்சியால் உச்சநிலைக்கு வருபவர்களாவர்

3. பன்னிரெண்டு ராசிகளிலேயே கும்பம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த வீடு ஆதலால் இவர்களும் மகரத்தானைப் போன்றே நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, சதா ஆன்மீக சிந்தனைகளைக் கொண்டிருப்பர்

4. பொதுவாக கும்ப ராசி மற்றும் லக்கினக்காரர்கள் எப்போதுமே தங்களை குறைத்தே மதிப்பிடுவர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அதீத ஆற்றல் சக்தியை அவர்கள் உணர்வதேயில்லை. அப்படியாக உணர்ந்தவர்களில் ஒருவர்தான் கும்பத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்ட அருள்மிகு #ஶ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சர் ஆவார்

5. அதிவீரியக் கிரகங்களான #செவ்வாய் மற்றும் #ராகுவின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்டுள்ளதால் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் கருநாகத்தின் குணமும், ஆஞ்சனேயரைப் போன்ற வேகமும், மனோ வலிமையும் கொண்டவர்கள். மேலும் இங்கு #குருவின் திரிஜென்ம நட்சத்திரமும் இருப்பதால் இவர்கள் சுவாபத்தில் சுபராவர்

6. அவரோகண/ஆதாரச் சக்கரத்தில் #ஆக்னாவான கும்பம் மெய்ஞானத்தின் உச்சமாக இருப்பதால் இவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஞானோதய விசயங்களோ ஏறாளம், எண்ணிலடங்கா. தவிர, #மெஸ்மரிசம் மற்றும் #வசியம் போன்ற தன்மைகள் இவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். அதனாலேயே கும்பத்தை சிலர் மாந்தியின் ஆட்சி வீடென்பர்!

மல்லீஸ் குமார்
சென்னை

மீனம் (பொதுப்பலன்):

1. பிரகஸ்பதி குருவின் வீடான மீனத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு, சாஸ்திரத்தில் நாட்டம், சகிப்புத்தன்மை மற்றும் தன்னலமில்லாப் பண்புகளைக் கொண்ட கலியுகத்தின் தங்கமாகிய இவர்கள் "கோபம்" என்னும் ஆயுத்தைப் பிரையோகிக்க ஒருபோதும் விரும்பமாட்டர்

2. காலபுருஷனுக்கு 12ம் வீடாக மீனம் வருவதால் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அயன/சயன போகங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதால், இவர்கள் ஆத்மீக ரீதியான விசயங்களில் மிகவும் தெளிவானவர்கள்

3. களத்திரக்காரன் சுக்கிரன் உச்சமாகும் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அதீத கற்பனைத் திறன், மிகுதியான நகைச்சுவையுணர்வு, அடுத்தவர்களை தம் செயல்பாட்டால் வசீகரிக்கும் தன்மை மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய குணத்தைக் கொண்டவர்கள் ஆவர்

4. வித்யாக்காரன் புதன் நீசமாகும் மீனத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நிலை தடுமாறினாலும் அதை யாரிடம் கேட்டறிந்தால் தீர்வாகும் என்பதை நன்கு அறிந்தவர்களாவர். அது தவிர இவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படின் அது அவர்களின் உடல்நிலை வரையிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதாவது அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாவர்

5. சனி மற்றும் புதனின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்ட மீனத்தான் வயதுக்கு மீறிய விசயங்களை  சாமர்த்தியமாக செய்து முடிக்கும் தன்மை மற்றும் வாழ்வியல் பொருளாதார விசயங்களில் சிக்கனத்தின் சிகரங்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் விசுக்தியான மீனம் வாழ்வில் எவ்விதமான துன்பங்கள் வரினும் அதை தமக்குள்ளே அடக்கி வைத்து, வெளிப்புறத்தில் எப்போதும் ஏகாந்த இன்பநிலையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டது!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை