Monday, 28 September 2020

மீனம் (பொதுப்பலன்):

1. பிரகஸ்பதி குருவின் வீடான மீனத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு, சாஸ்திரத்தில் நாட்டம், சகிப்புத்தன்மை மற்றும் தன்னலமில்லாப் பண்புகளைக் கொண்ட கலியுகத்தின் தங்கமாகிய இவர்கள் "கோபம்" என்னும் ஆயுத்தைப் பிரையோகிக்க ஒருபோதும் விரும்பமாட்டர்

2. காலபுருஷனுக்கு 12ம் வீடாக மீனம் வருவதால் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அயன/சயன போகங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதால், இவர்கள் ஆத்மீக ரீதியான விசயங்களில் மிகவும் தெளிவானவர்கள்

3. களத்திரக்காரன் சுக்கிரன் உச்சமாகும் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அதீத கற்பனைத் திறன், மிகுதியான நகைச்சுவையுணர்வு, அடுத்தவர்களை தம் செயல்பாட்டால் வசீகரிக்கும் தன்மை மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய குணத்தைக் கொண்டவர்கள் ஆவர்

4. வித்யாக்காரன் புதன் நீசமாகும் மீனத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நிலை தடுமாறினாலும் அதை யாரிடம் கேட்டறிந்தால் தீர்வாகும் என்பதை நன்கு அறிந்தவர்களாவர். அது தவிர இவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படின் அது அவர்களின் உடல்நிலை வரையிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதாவது அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாவர்

5. சனி மற்றும் புதனின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்ட மீனத்தான் வயதுக்கு மீறிய விசயங்களை  சாமர்த்தியமாக செய்து முடிக்கும் தன்மை மற்றும் வாழ்வியல் பொருளாதார விசயங்களில் சிக்கனத்தின் சிகரங்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் விசுக்தியான மீனம் வாழ்வில் எவ்விதமான துன்பங்கள் வரினும் அதை தமக்குள்ளே அடக்கி வைத்து, வெளிப்புறத்தில் எப்போதும் ஏகாந்த இன்பநிலையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டது!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மேஷம் (பொதுப்பலன்):

1. அங்காரகனாகிய செவ்வாயின் மேஷத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தைரியம், முரட்டுத்தனம், வீர பராக்கிரம மற்றும் வைக்கிராக்கிய குணங்களைக் கொண்டிருப்பர்

2. காலபுருஷனின் லக்கின பாவமான மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் பிறப்பிலேயே ரோஷக்காரர்கள். தவிர, கடந்தகால நினைவுகளை தொடர்ச்சியாக நிந்திப்பதோடு, எந்நேரமும் விழிப்புடன் செயல்படும் தன்மை கொண்டவர்கள்

3. கர்மக்காரகன் சனி நீசமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்களின் எண்ணமும், செயலும் பிறழாமல் ஒரே பாதையில் பயணிக்கும் கருமமே கண்ணாயினர். அதாவது, தான் நினைத்த காரியத்தை அதன்படியே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்

4. ஆத்மக்காரகன் சூரியன் உச்சமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினக்கினமாகக் கொண்டவர்கள் எவருக்கும் அடிபணியாத தன்மைப் பெற்றிருப்பதோடு, மற்றவர்களை தம் அதிகாரத்தால் அடக்கி ஆளும் ஆளுமைக்குணம் கொண்டவர்கள்

5. அஸ்வினி/பரணி/கார்த்திகை ஆகிய பெரும் நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ள மேஷம் பிரபஞ்ச ரகசியத்தின் ஆதிமூலம் ஆகும். எனவேதான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் தன்னுள்ளே ரகசியங்களைக் கட்டிக்காப்பதில் வல்லவர்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் அநாகதமான மேஷம் அன்பு, பாசம், இரக்கம் மற்றும் விசுவாசம் ஆகிய நற்குணங்களின் இருப்பிடகும். அதனால்தான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் அன்புக்கு மட்டுமே அடிமைகளாவர்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஆதாரசக்கரம் - எமது விளக்கம்

அஉம். சகஸ்ரரா − பரமேஸ்வரன்/பரமேஸ்வரி (ராகு)

அண்டம் (மகாரம்):
1(ய). ஆக்னா/ஆகாயம் − சதாசிவ(ம்)+மனோன்மணி (குரு)

கண்டம் (உகாரம்):
2(வா). விசுக்தி/வாயு − மகேஸ்வரன்+மகேஸ்வரி (சனி)

பிண்டம் (அகாரம்):
3(சி). அநாகதம்/நெருப்பு − ருத்ரன்+பார்வதி (செவ்வாய்)

4(ம). மணிப்பூரகம்/நீர்− பிரம்மா+சரஸ்வதி (புதன்)

5(ந). சுவாதிஸ்டானம்/மண்− விஷ்ணு+லட்சுமி (சுக்கிரன்)

6. மூலாதாரம் − சக்தி/விநாயகர் (கேது)

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சதாசிவ பிரம்மேந்திரம்

காரிய உடலில் மஹா காரணத்தை (ஆத்மா) தாங்கி "கர்மவினையில்" பயணிக்கும் நமக்கு 24 மணி நேரமும் தன்னுணர்வில் இருக்க வாய்ப்பில்லை. அதாவது லீலையில் இருந்து கொண்டு நித்தியமாய் மாறும் தன்மை என்பது மீண்டும் தாயின் கருவறைக்குள் பயணிக்கும் நிலைப்பாடு போலாகும். ஆனால் இயல்பிலோ அல்லது தியானத்திலோ அந்நிலை சில வினாடிகள் அல்லது நாழிகைகள் மட்டும் வாய்க்கப்பெற்று தன்னுணர்வின் ஏகாந்தத்தில் (பரமசுகம்) லயித்திருக்கலாம். அதுவே மனமில்லா/காலமில்லா "காலபைரவ" நிலையாகும். ஆனால், இந்நிலை தொடர்ந்து நீடித்து ஏதுமற்ற நிலைக்குள் பரிணமித்தால் அதுவே "சதாசிவபிரம்மேந்திரம்" ஆகும், தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ண பிரேமையான லீலையில்தான் லயித்திருப்போம். அதுவே "பிரம்மை" என்றும் "மாயை" என்றும் அழைக்கப்படும்!

கிருஷ்ண பிரேமையில் "பஞ்சபூதமாகிய" இருப்போடு "நவக்கிரகமாகிய" இயக்கம் சேர்ந்து, அதில் சூட்சுமமாகிய "மனமும்" லயித்து உலகம் உண்டாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சைவ நாற்பாதங்கள் (முக்திக்கான வழிகள்):

ஆத்ம ஸ்வரூபமாய் இருந்து இப்புவியில் உடலெடுத்த மறுகணமே மனிதனின் கர்மவினை தொடங்கிவிடும். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அகங்காரம் என்பது சக்தியின் ஸ்வரூபமாய் அவரவரவர் தன்மையைப் பொறுத்து வெளிப்படும். அத்தகைய மாபெரும் சக்தியை தவத்தால்/யோகத்தால் அகத்தில் செலுத்தி சிவத்துடன் இணைத்தால் முக்தியாகும். ஆனால் பாமரனுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் மனிதன் முக்தி நிலையை அடைய நான்கு விதமான மார்க்கங்கள் உண்டு. அது சைவ நாற்பாதங்கள் என்றழைக்கப்படும்.

சைவ நாற்பாதங்கள் என்பது மனிதன் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் திருவடியை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதனை சைவ நன்னெறிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் எனவும் கூறப்படுகிறது. அவை,

1. சரியை - பக்திமார்கம்
2. கிரியை - கர்மமார்க்கம்
3. யோகம் - சகமார்க்கம்
4. ஞானம் - சன்மார்க்கம்

1. சரியை (பக்திமார்கம்):

சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவாக செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.

ஆலயங்களில் இறைவனை மனமுருகி வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

சரியையின் நாற்படிகள்:

அ. சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

ஆ. சரியையிற் கிரியை - ஒரே ஒரு மூர்த்தியை வழிபடல்.

இ. சரியையில் யோகம் - வழிபடும் கடவுளை தியானித்தல்.

ஈ. சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

2. கிரியை (கர்மமார்க்கம்):

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக வேத சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறிக்குள் அடங்கும்.

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல் (பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும். செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தலும் கர்மமார்க்கமேயாகும்.

கிரியையின் நாற்படிகள்:

அ. கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

ஆ. கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

இ. கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

ஈ. கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

3. யோகம் (சகமார்க்கம்):

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (வாசி) ஆகிய "அட்டாங்க யோகங்கள்" உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

யோகத்தின் நாற்படிகள்:

அ. யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

ஆ. யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

இ. யோகத்தில் யோகம் - தியானம்

ஈ. யோகத்தில் ஞானம் - சமாதி

(சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

4. ஞானம் (சன்மார்க்கம்):

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்து "சதாசிவபிரம்மேந்திரமாக" இருத்தல் ஆகும். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் அறிந்து இறையின் அம்சமாகவே மாறுதல். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முந்தைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

ஞானத்தின் நாற்படிகள்

அ. ஞானத்திற் சரியை - ஞான நூல்களைக் கேட்டல்.

ஆ. ஞானத்திற் கிரியை - ஞான நூல்களைச் சிந்தித்தல்.

இ. ஞானத்தில் யோகம் - ஞான நூல்களால் தெளிதல்.

ஈ. ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்ட்டை கூடல்.

(மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்)

Edited by
C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவழி தியானமே சிறந்தது

ஒருவருடைய உடல் கட்டமைப்பு மற்றொருவரின் உடல் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடும். அதன் அடிப்படையில்தான் யோகாசன/தியானப் பயிற்சிகள் குருமார்களால் வழங்கப்படும். அதனால், யாராக இருந்தாலும் தியானம் பழகும் காலங்களில் அவரவர் குருநாதரின் கண்காணிப்பில் இருந்து பழகுவது மிக மிக அவசியம். தவிர, குருமுகமின்றி தாமாகவே யோகம் அல்லது தியானம் செய்ய முயன்றால் அதனால் வரும் உடல் உபாதகளை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

உதாரணமாக:−

1. கண், நாசி, செவி, மர்ம உறுப்புகள் மற்றும் மலத்துவாரங்களில் இரத்தக் கசிவு ஏற்படலாம்

2. மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகலாம்

3. பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகி மாதவிலக்கு பிரச்சனைகள் (over bleeding) வரலாம்

4. வாதம்/கபம்/பித்தம் ஆகிய மும்மலங்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடல் உபாதைகள் வரலாம்

5. சூன்யாவிற்குள் மனம் சென்று திரும்பி வெளியேற இயலாமல் கோமா (சமாதி) நிலைக்குச் செல்ல நேரிடலாம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பிரபஞ்ச தத்துவம்

ஒரு பொருள் எங்கிருந்து பிறந்ததோ அங்குதான் அது ஒடுங்கவும் செய்யும். அதாவது, சிவத்தில் சக்தி ஒடுங்குமே தவிர, சக்தியில் சிவம் ஒருபோதும் ஒடுங்காது.

காரணம், பிரளயத்தின்போது பராபரமாகிய பிரம்மத்தில் பரம் தோன்றி; பரத்தில் சிவம் தோன்றி; சிவத்தில் சக்தி தோன்றியது. அதுபோலவே, சக்தி சிவத்தில் ஒடுங்கி, சிவம் பரத்தில் ஒடுங்கி, பரம் பிரம்மத்தில் ஒடுங்கும். இதுவே சிவசக்தி, பரமசிவம் மற்றும் பரப்பிரம்மம் ஆகும். இத்தன்மையே அண்டத்திலும் (புறம்) பிண்டத்திலும் (அகம்) வியாபிக்கிறது.

எனவே, சிவத்திலிருந்து சக்தி தோன்றினால் அது #லீலை. ஆனால் சிவத்தில் சக்தியானது ஒடுங்கினால் அது #நித்தியம். இதை எப்படி பிறித்தரிவதெனில், நாம் பூமியானது லீலையாகிய மாயை ஆகும். இங்கு சூரியனானது (சிவம்) சந்திரனில் (சக்தி) ஒடுங்கி பௌர்ணமி போன்ற மாயைப் பிம்பம் உண்டாகுமே தவிர நிஜத்தில் சூரியனானது சந்திரனில் ஒடுங்கவே ஒடுங்காது. அதாவது மாயையாகிய பூமிக்கே இந்த இருபடி (அமாவாசை/பௌர்ணமி) பிம்பங்கள் பிரதானமாகும்.

இன்னும் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டுமெனில்,

#சிவம்/புரோட்டான்/இருப்பு
#சக்தி/எலெக்டரான்/இயக்கம்

எலெக்ரான் புரோட்டானை சுற்றுமே தவிர, புரோட்டான் எலெக்ட்ரானை ஒருபோதும் சுற்றாது. காரணம், புரோட்டான் நிலையானது.

எனவே, சிவமானது சக்தியில் ஒடுங்கினால் அச்சிருஷ்ட்டி அழிந்துவிடும். இதுபற்றி அறிவியலில் "பொருண்மை அழியா விதி" என ஒரு கோட்பாடுண்டு!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை