Thursday, 1 September 2016

நமசிவாய

நம் உடலானது பஞ்ச பூதங்களால் 
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது பூதவுடல். அதுபோல மனிதனின் அறிவுசார் நிலைகளும் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவை,

#பஞ்ச/பூதம் (கிரக தன்மை) − நிலை

ந/மண் (புதன்)− அறியாமை (innocence)
ம/நீர் (சுக்கிரன்) − அனுமானம் (guessing)
சி/நெருப்பு (செவ்வாய்) − அனுபவம் (experince)
வா/காற்று (சனி) − அறிவு (knowledge)
ய/ஆகாயம் (குரு)− ஞானம் (wisdom)

இவை ஸ்தூலம் மற்றும் சூட்சும விசயங்கள் சார்ந்தவை. ஸ்தூலமானது பூதமாகவும் சூட்சுமமானது கிரகமாகவும் பரிணமித்திருக்கும். மேற்கூறியபடி ஒவ்வொரு பூதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தன்மை உண்டு. அதுபோல ஒவ்வொரு பருவ நிலைக்கும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ஆளுமை பிரதானமாயிருக்கும். அதாவது,

நிலை − கிரக/ஆளுமை:

1. அறியாமை − சூ, சந்
2. அனுமானம் − செ, பு, சு
3. அனுபவம் − சனி, ராகு
4. அறிவு − குரு
5. ஞானம் − கேது

அறியாமை அனுமானமாகி
அனுமானம் அனுபவமாகி
அனுபவம் அறிவாகி
அறிவு ஞானமாகும்!

உடலின் இத்தைகைய பஞ்சபூத மற்றும் நவக்கிரக கலவைகளின் கட்டமைப்பைப் (Constrctive design) பொருத்து இதன் அளவீடு நபருக்கு நபர் மாறுபடும். அதாவது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து மனத்தால், புத்தியால், அறிவால் வேறுபடுவது மேற்கூறிய பஞ்சபூத மற்றும் நவக்கிரகக் கலவைகளின் கட்டமைப்பைப் பொருத்தே அமையும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

திரு_அம்பலச்_சக்கரம் (சிதம்பர−சக்கரம்)

"சிதம்பர சக்கரம் தான் அறிவார்-இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம் தானும் என்றால்−அதற்குள் தெய்வத்தை யல்லோ அறியவேணும்".

எனச் சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை #வள்ளலார் (இராமலிங்க அடிகள்) தனது அகவலில் தெளிவாக எழுதியுள்ளார். மேலும் அது பஞ்சபூத #பஞ்சாட்சரமாகிய−"நமசிவாய" என்பதைத்தவிர வேறில்லை.

ஆக #பஞ்சபூதங்கள் இறையின் அம்சமேயாகும். அதாவது, உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்சபூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. பஞ்சபூதமானது #உருவமாயும், #அருவமாயும் எங்கும் நிறைந்துள்ளது. நிலம், நீர் தீ, காற்று மற்றும் வெட்டவெளியாகிய ஆகாயம் அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது.

பஞ்சபூதங்களாவன:
மண், நீர், தீ, வாயு, ஆகாயம். இவை #பஞ்சாட்சரமாகும் (நமசிவாய).

#ந−பிருதிவி-மண்
#ம−அப்பு-நீர்
#சி−தேயு-தீ
#வா−வாயு-காற்று
#ய−ஆகாயம்-வெளி

ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும்
சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய்
உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும்.
விடை என்பது எப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். "சிதம்பர சக்கரத்தை" #ஸ்தூலம், #சூட்சமம், #காரணம் என பல பிரிவுகளில்விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில் #சரத்தால் (சுவாசத்தால்) ஏற்படும் மாற்றத்தையும் அதில் இப்பூதங்களில் செயல்பாடுகளைக் காண்போம்.

சரமானது #மண்ணை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

மண்ணில்/மண்−எதிலும் நிறைவுண்டாகும்,
மண்ணில்/நீர்−அடிசேரலாம்
மண்ணில்/காற்று−அலைந்து அலைந்து
அவனடி சேர்வர்,
மண்ணில்/நெருப்பு−உடல் உஷ்ணம்
அதிகமாகும்,
மண்ணின்/ஆகாயம்−பிடி கிடைக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பர்.

சரமானது #நீரை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

நீரில்/நிலம்−கலத்தல் எனும் ஐக்கிய
பாதையான சமாதி நிலையை அடையலாம்,
நீரில்/நீர்−எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில்/நெருப்பு−உடல் குளிர்ச்சியாகும்,
நீரில்/காற்று−அமிர்தம் சுரக்கும்,
நீரில்/ஆகாயம்−அப்படியே சில நிமிடங்கள் அதிர்ந்து போய் இருக்கும் நிலையில்
இம்மூச்சு ஓடும்.

சரமானது #தீயை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

தீயில்/மண்−ஆயுள் நீட்டிப்பு,
தீயில்/நீர்−ஆயுள் குறைவு,
தீயில்/தீ−இருநிலை மாற்றம்,
தீயில்/காற்று−மயக்கத் தோற்றத்தை
உருவாக்கும்,
தீயில்/ஆகாயம்−புவிஈர்ப்பு விசையை மீற
முடியும்.

சரமானது #காற்றை சார்ந்து நடக்கும்போது (ஆரம்பம்/முடிவு):

காற்றில்/மண்−நோய் அறிகுறி,
காற்றில்/நீர்−விந்து மேலேறும்,
காற்றில்/தீ−உடம்பில் தீயின் சுழற்சியை
காணலாம்,
காற்றில்/காற்று−காந்தவியல் அழுத்தம்
மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில்/ஆகாயம்−பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை.

சரமானது #ஆகாயத்தை சார்ந்து நடந்தால் (ஆரம்பம்/முடிவு):

ஆகாயத்தில்/மண்−உச்சி திறக்கும்,
தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில்/நீர்−சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்,
ஆகாயத்தில்/காற்று−விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில்/தீ−பரமாத்மாவை
தெளிவாக காணலாம்,
ஆகாயத்தில்/ஆகாயம்−இருள் நிலை, மாயை,
முழு ஞானம் உற்பத்தியாகும்.

மேலும் #சந்திரகலை (சக்தி) குளிர்ச்சியாக இருப்பதால் அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான் #அறிவு உதிக்கின்றது. இதேபோல் #சூரியகலை (சிவன்) உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் #மாயை அல்லது #பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது #பிரம்மதோடு_இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள் உள்நிலையும் உங்கள் வெளி உலக நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து
கொள்ளலாம்.

#அண்டத்தில் உள்ளதெல்லாம் #பிண்டத்தில்
என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்
(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன
மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல்
அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும். இதுவே நம் உடலுக்கு உள்ளும்−வெளியும் நிகழ்பவை.

#பிருதவியில் ஏற்படும் மாற்றம்:

மண்ணை/மண்ணில் போட்டால்−நிறையும்,
மண்ணை/நீரில்−அடி செல்லும்,
மண்ணை/காற்றில்−அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்,
மண்ணை/தீயில்−உஷ்ணமாகும்,
மண்ணை/ஆகாயத்தில்−சுழலும்.

#அப்புவில் ஏற்படும் மாற்றம்:

நீரை/மண்ணில் கலந்தால்−பரவும்,
நீரை/நீரில்−பெருகும்,
நீரை/தீயில்−குளிர்ச்சி,
நீரை/காற்றில்−ஆவியாகி மேகமாகி மழை
வரும்,
நீரை/ஆகாயத்தில்−உறை நிலை.

#தேயுவால் ஏற்படும் மாற்றம்:

தீயை/மண்ணில் போட்டால்−அழியாநிலை
(உஷ்ணம்),
தீயை/நீரில்−அழிவுநிலை,
தீயை/தீயில்−இருநிலை மாற்றம்,
தீயை/காற்றில்−அனல், கானல்நீர், வெக்கை,
உருக்கம்,
தீயை/ஆகாயத்தில்−குமிழாகி பறக்கும்.

#வாயுவால் ஏற்படும் மாற்றம்:

காற்றை/மண்ணில்−விரிசல்,
காற்றை/நீரில்−நீர் சுழற்சி,
காற்றை/தீயில்−தீ சுழற்சி,
காற்றை/காற்றில்−காந்தவியல் அழுத்தம்,
காற்றை/ஆகாயத்தில்−மேகம் கலையும்.

#ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம்:

ஆகாயத்தை/மண்ணில்−பிரளயம், தியானம்,
ஆகாயத்தை/நீரில்−புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை/தீயில்−ஒளி பெருகும்,
ஆகாயத்தை/காற்றில்−கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை/ஆகாயத்தில்−இருநிலை, மாயை, பிரமை.

நம் #ஸ்தூல_சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக
மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண
காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு
பற்றி காண்போம்.

#ஸ்தூல_பஞ்சீகரணம்:

மண்ணில்/மண்−உடலில் சக்தி
குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில்/நீர்−உடலில் மாமிசம்
உருவாகின்றது,
மண்ணில்/தீ−சருமமாகிய தோல்
உருவாகின்றது,
மண்ணில்/வாயு−நரம்புகளும்,
மண்ணில்/ஆகாயம்−ரோமமும்,

நீரில்/நீர்−சிறுநீரும்,
நீரில்/மண்−உமிழ்நீரும்,
நீரில்/வாயு−உதிரமும்,
நீிரில்/தீ−வியர்வையும்,
நீரில்/ஆகாயம்−சுக்கிலமும்,

தீயில்/தீ−நேத்திர கண்ணும்,
தீயில்/ஆகாயம்−செவியும்,
தீயில்/வாயு−சரீரமும்,
தீயில்/நீர்−வாயும் நாக்கும்,
தீயில்/மண்−நாசியும்,

காற்றில்/மண்−இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில்/நீர்−குதமும் அபான வாயுவும்,
காற்றில்/காற்று−சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில்/தீ−கழுத்தும் உதானனும்,
காற்றில்/ஆகாயம்−தொப்புளும், சமானனும்,

ஆகாயத்தில்/மண்−இருதயமும்,
ஆகாயத்தில்/நீர்−நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில்/தீ−மார்பும்,
ஆகாயத்தில்/காற்று−கண்டமும்,
ஆகாயத்தில்/ஆகாயம்−சிவமும்
உருவாகின்றன.

#சூட்சும_பஞ்சீகரணம்:

மண்ணில்/மண்−கலந்து குதமும்,
மண்ணில்/நீர்−குய்யமும்,
மண்ணில்/தீ−கைகளும்,
மண்ணில்/காற்று−பாதங்களும்,
மண்ணில்/ஆகாயம்−வாக்கும்,

நீரில்/ஆகாயம்−சத்தமும்,
நீரில்/காற்று−தொடு உணர்வும்,
நீரில்/தீ−பார்வையும்,
நீரில்/நீர்−சுவையும்,
நீரில்/மண்−வாசனையும்,

தீயில்/தீ−பசியாகிய தீபாக்கினியும்,
தீயில்/மண்−தாகமும்,
தீயில்/நீர்−தூக்கமும்,
தீயில்/காற்று−கொட்டாவியும்,
தீயில்/ஆகாயம்−சங்கமமாகிய கலத்தலும்,

வாயுவில்/வாயு−ஓட்டமும்,
வாயுவில்/நீர்−இருத்தலும்,
வாயுவில்/தீ−தத்தித்தத்தலும்,
வாயுவில்/மண்−நடத்தலும்,
வாயுவில்/ஆகாயம்−படுத்தலும்,

ஆகாயத்தில்/மண்−ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில்/நீர்−துவேசமும்,
ஆகாயத்தில்/தீ−பயமும்,
ஆகாயத்தில்/காற்று−வெட்கமும்,
ஆகாயத்தில்/ஆகாயம்−மோகமும் உருவாகின்றன

ஆக, இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும்−வெளியிலும்,
ஸ்தூலமாகவும்−சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும்
முன் தாயின் கருவிலும், பிறந்தபின்
வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு
காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும்
#ஆணவம், #கோபம், #ஆசை போன்றவற்றிற்கும் இப்பூதங்களே காரணகாரியமாகும்.

Monday, 8 August 2016

ஜோதிடம்

ஆயக்கலைகள் 64ல் ஜோதிட சாஸ்திரமும் ஒன்று. அது ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயக்கலைகள் 64க்கும் அதிபதி "சுக்கிரன்" ஆக ஜோதிடத்தின் அதிபதியும் சுக்கிரனே என்ற உண்மைக் கருத்தோடு, ஜோதிடத்திற்கான விளக்கத்தையும், உருவான காலத்தையும் பற்றி மேற்கொண்டு அறியலாம்.

"நாம்" என்பது "பிரபஞ்சத்தின்" பிரதி, ஆக நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் சாஸ்திர நூலே ஜோதிடமாகும். குறிப்பாக, அகம் மற்றும் புறத்திலிருக்கும் ஜோதியை தொடர்புபடுத்திக் கூறுவதாகும். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமெனில், பிரபஞ்சத்தத்துவம் (அ,உ,ம்−நமசிவாய) மற்றும் சப்தரிஷி மண்டலத்தில் (நட்சத்திர தாத்பர்யம்) கோள்களின் இயக்கம், அதுபோல நம்மில் உயிர்த்தத்துவம் (உயிர்/ஆன்மா−மனம்) மற்றும் உடற்கூறுத் தத்துவத்தை (தத்துவங்கள்−96) ஒருமித்தே உள்ளடக்கிய சாஸ்திர நூலே ஜோதிடமாகும். அதாவது கோள்களும், வான்வெளியில் அவற்றின் நகர்வுகளும், புவியில் வாழும் எல்லா உயிரினங்கள் மீது அவற்றின் செயல்பாடுகளிலும் மற்றும் இயற்கை நிகழ்வுகளிலும் பலவிதமான தாக்கங்களை உண்டாக்குகின்றன என்பதே ஜோதிடத்தின் அடிப்படைப் புரிதலாகும்.

ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாக கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும், எப்போது எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்க ஜோதிடக் கணிதம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. அவை,

1. சித்தாந்த ஸ்கந்தம்
2. சம்ஹித ஸ்கந்தம்
3. ஹோர ஸ்கந்தம்

#சித்தாந்த_ஸ்கந்தம்: அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது.

#சம்ஹித_ஸ்கந்தம்: வானவியல் மற்றும் ஜோதிடக் கணிதம் முதலான துறைகளைப் பேசுகிறது.

#ஹோர_ஸ்கந்தம்: கோள்களின் இயக்கம் மற்றும் அவற்றின் கதிர்வீச்சுகள் பூமியின் மீதும், மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பருப்பொருட்களே. அவை அனைத்துமே குறிப்பிட்ட ஈர்ப்பு மற்றும் விலக்கு விசையின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் ஜோதிட நூல்கள் 7 கோள்களைப் பற்றி மட்டுமே கூறுகின்றன. ஏனைய இரண்டாகிய ராகு மற்றும் கேது என்பன நிழற்கோள்கள் அல்லது கற்பனைக் கோடுகள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் நாம் அறிந்ததே.

கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் குறிப்பதற்கு ஜோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட முறையையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது கண்ணுக்கு புலப்படாத 360 பாகைகள் கொண்ட ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பாவங்களாகப் பிரிக்கப்பட்டு, பாவத்திற்கு 9 பாதங்கள் என உடற்கூறுத் தத்துவத்துவத்தின் (ஜீவ நாடிகள்−108) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோதிட சாஸ்திரம் ரிஷிகளாலும், முனிவர்களாலும் இரண்டாம் கற்பத்தின்−இரண்டாம் யுகத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதுதான் ஶ்ரீ ராமபிரான் அவதரித்த காலமாகும். முதல் யுகத்தில் பஞ்ச (சு,பு,செ,சனி,கு) கிரகங்களும், இரண்டாவது யுகத்தில் சப்த (சூரியன்−சந்திரனும்) கிரகங்களும், மூன்றாம் யுகத்தில் நவக் (ராகு−கேதுவும்) கிரகங்களும், நான்காவது யுகத்தில் தசக் (மாந்தியும்) கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதாவது, யுகங்கள் மொத்தம் நான்கு. அவை,

1. #கிரேதாயுகம் (34,56,000 வருடங்கள்)
2. #திரேதாயுகம் (17,28,000 வருடங்கள்)
3. #துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. #கலியுகம் (4,32,000 வருடங்கள்)
இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு #மகாயுகம் (64,80,000 வருடங்கள்).

71 மகாயுகம் கொண்டது ஒரு #மனு.
14 மனு கொண்டது ஒரு #கற்பம். ஆக, ஒரு கற்பம் என்பது 644,11,20,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,117 ஆண்டுகள் ஆகிறது. இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதலாவது கற்பமான #வாமதேவ_கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான #சுவதேவராக_கற்பம் (60,53,117 வருடங்கள்) இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிவடைந்து நான்காவது யுகமான #கலியுகம் (5117 வருடங்கள்) நடந்து கொண்டிருக்கிறது.

−தொடரும்...

மனம் என்கிற #மாயையின் சக்தி

மனத்தின் வெளிப்பாடு தான் #உலகம். மனிதன் பிறப்பதற்குமுன் மனம் என்ற ஒன்று இல்லை, அது உண்டாகாது. மனம் என்பது இந்த பூமியில் பிறந்தவுடன் வருவது ஆகும்.

#மனம் என்பது ஐம்புலனுகர்ச்சியான
கண்− பார்ப்பதாலும்
காது− கேட்பதாலும்
மூக்கு− நுகர்வதாலும்
வாய்− சொல் மற்றும் சுவைப்பதாலும்
தோலின்− தொடு உணர்வாலும்

நாளடைவில் உருவாகும்.

ஆக, ஏதாவது ஒன்று இயங்கினால் மட்டுமே மனம் உருவாகும். மூன்று மாதங்கள் சென்ற பின் மூளை வளர்ச்சிபெறத் தொடங்கும். நாம் அதை "அறிவு" என்று அழைகின்றோம். மிருகங்களுக்கு அறிவு மட்டும் வளரும்.
ஆனால் மனிதனுக்கோ மனமும் அறிவும் சேர்ந்து வளரும். எனவே மனம் என்ற ஒன்று மனித இனத்திற்கு மட்டுமே உண்டு.

"மனம் இருப்பதாலேயே அவன் மனிதன்".
மனிதன் என்ற தமிழ் சொல்லுக்கு அழிவில்லாதவன் என்று பொருள்.

#மா அல்லது #ம என்றால் மனம்
#நீ அல்லது #நி என்றால் தான் அல்லது தனக்கு
#தன் என்றால் தன்னகத்தே கொண்டுள்ள, அதாவது மற்றதர்கல்ல

ம +நீ + தன் = மனிதன்
அதாவது, மனத்தை தன்னகத்தை கொண்டுள்ளவன் "மனிதன்"

மேலும், மனமானது எதை உள் வாங்குகிறதோ, அது அதுவாக மாறும் தன்மை கொண்டது. ஜீவனின் சலனம் மனம்.

கோவில்களின்_ரகசியங்களும்_அவற்றின்_சூட்சுமப்பின்னனிகளும்

"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

என #சிவவாக்கியரும்,

"வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்;
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார்;
கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்; திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை;
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்; வேரற்ற மரம்போலே விழுவார் பாரே"

எனக் #காகபுசண்டரும், கோவில் மற்றும் விக்கிரக வழிபாடுகளை வெகுவாகப் பழித்துக்கூறினாலும்,

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

என #ஔவையாரும்,

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என #முதுமொழிகள் பலவாறு கோவில்களின் சிறப்பை முன்னிறுத்திக்கூறுவதால் ஏன் கோவில்கள் நிறுவப்பட்டன என்றும், நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. இதற்கான காரண−காரியப் பின்னனிகளையும், நான் அறிந்துணர்ந்த விசயங்களையும், நண்பர்களாகிய உங்கள் அனைவரிமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

#ஆலயம்−ஆன்மா லயிக்குமிடம் என்றும்; #கோவில்−இறைவனுடைய இல்லம் என்றும் விளக்கங்கள் கூறப்பட்டாலும், கோவில்கள் நிறுவப்பட்டதை நான்கு நிலைகளாக #ஆகமகங்கள் குறிப்பிடுகின்றன. அவை,

1. #தைவிகம்−புண்ணிய ஆத்மாக்களாலும்
2. #ஆசுரம்−அசுரர்களாலும்
3. #ஆர்ஷம்−முனிவர்களாலும், ரிஷிகளாலும்
4. #மாநுஷம்−அரசர்களாலும், மக்களாலும்.

இங்கு #ஆகமங்கள் என்பது எவ்விடத்தில், எந்த தன்மைகளில், எப்படிப்பட்ட கோவில்களை நிறுவவேண்டுமென்ற #ஆகமவிதிகள் கொண்ட தொகுப்பாகும். மேலும் இதை தத்துவ ரீதியாகக் கூறவெண்டுமெனில் "ஆகதம்−கதம்−மதம்" என்பதன் முதல் எழுத்துக்களே ஆகமங்களாயின, அதாவது

#ஆகதம்−வந்தது (சிவனிடமிருந்து)
#கதம்−சென்றது (சிவனிமிருந்து சக்திக்கு)
#மதம்−மதித்துப்போற்றப்பட்டது (சக்தியிடமிருந்து விஷ்ணு மற்றும் ஏனையவர்களுக்கு) என்றும் கூறுபவரும் உண்டு.

அதாவது ஆகம விதிப்படி ஒரு கோவிலை நிறுவ, அவ்விடத்தின் தன்மையை (பஞ்சபூத/நவக்கிரக) முதலில் அறியவேண்டும் அல்லது எவ்விடத்தில் அம்மாதிரியான தன்மைகள் இருக்கிறதோ அவ்விடங்களில் அத்தன்மைகளுக்குண்டான விருட்சங்களை பயிரிட்டும் அல்லது அவ்விடங்களில் இருக்கும் #உயிர்ப்புள்ள_ஜீவன்களின் (ஜீவசமாதி) அதிர்வலைகளை வைத்தும் தீர்மானித்தனர். உதாரணமாக தேவ விருட்சங்கள் என்று கூறப்படும் #அரசு, #நாகலிங்கம், #வில்வம், #மருதம் மற்றும் #வெண்நாவல் ஆகியவை குறிப்பிட்ட பஞ்ச பூதத்தன்மைகள் அல்லது தத்துவங்கள் இருக்குமிடங்களில் மட்டுமே வளரக்கூடியவை அல்லது அம்மாதிரியான விருட்சகங்கள் எவ்விடத்தில் வளர்கிறதோ அவ்விடத்தில் அத்தன்மைகளுக்கான கோவில்களைத் தீர்மானித்தனர்.

இயற்கையாகவே #மலைகள் மற்றும் #நதிநிலைகளில் அத்தன்மைகள் அதிகமாக காணப்படுவதால் அவ்விடங்களில் ஆகம விதிகள் கொண்டு கோவில்களைத் தீர்மானித்தனர். அது மட்டுமில்லாது #அக்னி கொண்டு பூஜைகளாலும் #மந்திரங்களாலும் சக்தியோடங்களை ஓரிடத்தில் நிலைநிறுத்தியும், நீர்நிலைகளை அமைத்தும் அவ்விடத்தில் கோவில்களைத் தீர்மானித்தனர்.

பொதுவாக கோவில்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை மூன்று விதங்களாகப் பிரித்துக்கூறலாம். அவை,

1. #ஸ்தூலம் (உடல்)
2. #சூட்சுமம் (மனம்)
3. #சூன்யம் (உயிர்/ஆன்மா)

அதாவது, பெரும்பாலான கோவில்கள் ஸ்தூலம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தியே தீர்மானிக்கப்பட்டுள்ளன, காரணம் ஸ்தூலமாகிய நம் #உடலை #ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும், எனில் ஏன் உடலை ஸ்திரப்படுத்ர வேண்டுமென்பதை நாம் #திருமூலரின் பாடலைக்கொண்டே அறியலாம், அது என்னவெனில்,

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்"

என்பதுவே ஆகும். ஆக, அகத்திலிருக்கும் இறைவனைத் (உயிர்/ஆன்மா) தாங்கி நிற்கும் நம் ஸ்தூலமாகிய கோவிலை (உடலை) #ஸ்திரப்படுத்துவது அவசியமாகிறது. மேலும் ஸ்தூல விசயங்களெனில் அங்கு #பஞ்சபூதங்களும், #நவக்கிரகங்களும் வந்துவிடுகின்றன. ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கும், நவக்கிரக செயல்பாடுகளுக்கும் (கதிர்வலைகள்) #சார்புடையதாவே #இச்சிருஷ்யும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் ஜனித்தநாள் முதல் உடலானது, புலன்களினூடே கிரகங்களின் ஒளி/மின்காந்த கதிர்வலைகளால் (Photo/Elecro/magnetic radiations) தொடர்புபட்டுள்ளது.

எனவேதான் #ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் பிரதானமாக்கூறப்பட்டு, #பரிகாரங்களாய் கோவில்களுக்குப் போகச்சொல்கின்றனர். எனவே, #பஞ்சபூதத்தன்மைகள் (ருத்ர, அர்த்தநாரி, காலபைரவ, நடராஜ, சதாசிவா) மற்றும் #தத்துவங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நவக்கிர கதிர்வீச்சுகளுக்கு ஏற்றார்போல் கலந்து அமைக்கப்பட்டு ஆகம விதிகள் கொண்டு அவ்விடங்களில் கோவில்களைத் தீர்மானித்தனர். மேலும், ஸ்தூல விசயங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட கோவில்களில் பஞ்சபூத−நவக்கிர தன்மைகள் எவ்வாறு நமக்குள் கிரகிக்கப்படுகிறதென்றும் நான் முன்னரே என்னுடைய கட்டுரைகளில் (நானும்−கோவிலும்) பதிவிட்டுள்ளேன்.

மேற்கூறப்பட்ட ஸ்தூல சம்பந்தமுடைய கோவில்கள் பெரும்பாலும் #சைவசித்தாந்தக் கோவில்களாகவே இருக்கிறது. அவை சிவன் (பஞ்சபூத) அல்லது சிவ−நவக்கிர கோவில்களாகவும், முருகன், அம்மன் விநாயகர் மற்றும் ஏனைய தெய்வங்களின் பெயர்களில் குறிப்பிட்ட தன்மைகள் அல்லது கிரக சக்தியை பிரதானமாகக்கொண்டு தீர்மானித்துள்ளனர். ஆனால் #வைணவ (பெருமாள்) கோவில்கள் அனைத்துமே சூட்சுமமாகிய #மனம் சார்ந்த விசயங்களின் அடைப்படைலேயே தீர்மானித்துள்ளனர். அதாவது, எல்லாப் பெருமாள் அல்லது விஷ்ணு கோவில்களிலும் மனம் லயிக்கும் விதமான ஆடம்பர கட்டிட அமைப்புகள், வாசனைப் பொருட்கள் (ஜவ்வாது−சந்தனம், வெண்ணெய், துளசி, மரிக்கொழுந்து) மற்றும் ஆபரணங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அங்கு இயல், இசை, நாட்டிய அரங்கேற்றங்களும் நடைபெறும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதுமிட்டுமில்லாது ஒரு ஹாஸ்யமான சுற்றுச்சூழலை நாம் அங்கு உணரமுடியும். மாறாக சைவசித்தாந்த சிவன் கோவில்களில் மயான அமைதியும், இருட்டுமாகிய தன்மையை உணரலாம்.

ஆனால் #சூன்யம் சார்ந்த கோவில்கள் என்பது அங்கு #உயிர்ப்புள்ள ஜிவனின் அலைகள் (அல்லது) புண்ணிய ஆத்மாக்களால் விக்கிரங்கள் (அல்லது) லிங்கங்கள் வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்தலங்களாகும். அவை சூட்சுமத்தை #ஸ்திரப்படுத்தும் விசயங்களாகும். எனவே அங்கு பஞ்ச பூதத்தன்மையோ அல்லது கிரக கதிர்வீச்சுகளோ பிரதானமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை, காரணம் அங்கு உயிர்ப்புள்ள #ஜீவனே_சிவமாகி அங்கு வரும் ஆத்மாக்களுடன் தொடர்புகொண்டு நல்லதொரு #அதிர்வலைகளை சூட்சுமமாக ஏற்படுத்துகின்றன. அதாவது பஞ்சபூத/நவக்கிரக கோவில்களைத் தவிர அனைத்து சிவன்கோவில்களுமே உயிர்ப்புள்ள ஜீவனின் #சமாதியே ஆகும். அவ்வாறு ஜீவசமாதியானவர்களின் மேல்பகுதிகளில் சிவலிங்கத்தை வைத்து கோவிலாகத் தீர்மானித்தனர்.

சைவசித்தாந்தக் கோவில்களைத்தவிர #பௌத்த மதக் கோவில்களும் ஜிவனின் உயிர்ப்புள்ள ஸ்தலங்களே ஆகும். மேலும் #கிறித்துவ மற்றும் #இஸ்லாமியக் கோவில்களும் #சூன்யம் சம்பந்தமுடைய தன்மைகளைக்கொண்டே நிறுவப்படிருக்கும். எவ்வாறெனில் அங்கு பிரபஞ்ச சக்திகளான ஒளி மற்றும் ஒலியை (சப்த ஸ்வரங்களாகிய வேத மந்திரங்கள், மணியோசைகள்) பிரதானமாகக் கொண்டிருப்பதை நாம் அறியலாம். ஏனெனில் இறைவன் #ஒளியாகவும் (ஆன்மா), #ஒலியாகவும் (உயிர்) இருக்கிறான் என்பதை அனைத்து மத நூல்களை (வேதம்/பைபிள்/குர்ரான்) ஆழமாகக் கற்றறிந்தவர்கள் நன்கு அறிவர்.

அதாவது ஒளியில் ஒலி (noise) இருப்பதையும், ஒலியில் ஒளி (photon) இருப்பதையும் அறிவியல் பூர்வமாக அறியலாம். மேலும் ஒளி−ஒலியானது நம்மில் (உடலில்) எவ்வாறு தொடர்பு படுகிறதென்பதை அடுத்தாக வரும் பதிவுகளில் விளக்கமாகப் பதிகிறேன். ஆக, கோவில்கள் ஏன் நிறுவப்பட்டன மற்றும் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதையும், அங்கு செல்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் என்னால் இயன்றவரை எடுத்துக்கூறியுள்ளேன். மேலும் இது அனைவருக்கும் பயன்படும்விதமாக நீங்கள் அனைவரும் இப்பதிவை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டி விழைகிறேன். நன்றி

#நானும்_கோவிலும் (பாகம்−3)

#திரு+#நளன்+#ஆறு_தர்பாரண்யேஸ்வரர் (#சனீஸ்வரர்−#உடணுறை)

நெடுநாளாய் எழுதவேண்டுமென நினைத்து, காரணமே தெரியாத சில காரணங்களால் இக்கோவிலைப் பற்றி என்னால் எழுதமுடியாமல் போனது, ஆனால் இன்று இக்கோவிலைப்பற்றி எழுதியே தீரவேண்டுமென்ற வைராக்கியத்துடன் சனியின் காரகமாகிய இரவில் (இருட்டு) எழுதுகிறேன். இதுவரை மக்களால் அறியப்படாத சில உண்மைகளுடன், நான் அங்கு சென்று உணர்ந்த தன்மைகளையும் நண்பர்களாகிய உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தலைப்பையும், படத்தையும் பார்த்துவிட்டு உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கலாம், #திருநள்ளாறில் #சனீஸ்வரன்தானே பிரதானம், அதென்ன #தர்பாரண்பேஸ்வரர் என்று, இப்பதிவின் நோக்கமே இங்குதான் அடங்கியுள்ளது, அதற்குமுன் சிந்தனைக்குரிய சில கேள்விகளும், அதற்குப்பின் விளக்கங்களையும் கூறுகிறேன். மேலும் பரிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பதன் புரிமாணத்தை இப்பதிவில் முடிந்த அளவில் எழுத முயல்கிறேன்.

பெரும்பாலான மக்களைப் பொருத்தவரை சனிபகவான் என்பவர் கெட்டவராகவும், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றால் அங்கு கொண்டுசென்ற பூஜைப் பொருட்களை அங்கேயே விட்டுவிடுவதுமே வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் திருநள்ளாறுக்கு கொண்டுசென்ற பூஜைப்பொருட்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லாம் என்பார்கள், காரணம் அங்கிருக்கும் சனீஸ்வரன் #அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலிக்கிறாராம், அப்படியென்றால் என்ன...? திடீரென்று சனீஸ்வரன் எப்படி அங்கு மட்டும் நல்லவரானார்..? ஏனெனில் சனீஸ்வரர் இங்கு அனுக்கிரகமூர்த்தியாக இருப்பதற்கு மூலகாரணமாக இருப்பவர் #தர்பாரண்யேஸ்வரர் ஆவார்.

அதாவது எந்த ஒரு நவக்கிரகக் கோயிலானாலும் அங்கு மூலவராக இருந்து அருள்பாலிப்பது எம்பெருமான் #சிவனே ஆவார். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உறுதி செய்துகொள்ளலாம். ஆக, ஏன் நவக்கிரகக்கோவில்களில் #சிவபெருமான் மூலவராக இருக்கவேண்டும் என்றால், நவக்கிரக கோவில்களில் அக்கிரகங்களின் #கதிர்வீச்சுகள் மிகுதியாகக் கிடைக்கப்பெற்றாலும் அக்கதிர்வீச்சை அல்லது #அத்தன்மையை நம்மில் கிரகிக்க (to resonate into our body) நமக்கு #பஞ்சபூதத்தின் உதவி அவசியம். அதாவது பஞ்சபூதம் என்றாலே அங்கு "நமசிவாய" என்பதைத்தவிர வேறில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக பஞ்சபூதத்

#தத்துவங்களாக:−
#ந−மண்
#ம−நீர்
#சி−நெருப்பு
#வா−காற்று
#ய−ஆகாயம் எனவும்;

#தன்மைகளாக:−
#ந−ருத்திரன்
#ம−அர்த்தநாரி
#சி−காலபைரவர்
#வா−நடராஜர்
#ய−சதாசிவமாய் எங்கும் பரவியிருக்கிறார்.

இங்கு விசயம் என்னவெனில், ஒரு கிரகத்தின் #வேகம் மற்றும் #தன்மையைப் பொறுத்து, அதாவது #கதிர்வீச்சைப்பொறுத்து பஞ்சபூத சிவமானவர் அதனுடன் ஒன்றாய்க் கலந்து அவற்றை நமக்குள் #கிரகிக்க (to resonate) அருள்பாலிப்பார். உதாரணம் ராகு போன்ற வீரியமிக்க கிரகமெனில் அதனை ஈடுகட்டும் வகையில் #காலபைரவ (zero state) தன்மையும்; சனியைப்போல மந்தன் எனில் (inert gas) அதனை சமப்படுத்த தீவிரனாகிய #ருத்ர தன்மை கலந்திருக்கும். ஆக இங்கு மந்தனாகிய சனியின் கதிர்வீச்சை (Ultra Vilolet like rays) நமக்குள் கிரகிக்க இங்கு தர்பாரண்யேஸ்வரர் #ருத்திரனாக அருள்பாலிப்பதாலேயே இங்கு சனிபகவான் அனுக்கிரமூர்த்தியாகிறார்.

#நானுணர்ந்த_ருத்திரன்:

சனியாகிய மந்தனின் மற்றொரு காரகம் #குளுமை. அதாவது, இங்கிருக்கும் கதிர்விச்சுத்தன்மையான #குளுமையை நம் அனைவராலும் நன்றாகவே உணரமுடியும், ஆனால் மந்தனின் அக்கதிர்வீச்சை நமக்குள் செலுத்த (to inject) ருத்ரனாகிய இயக்கம் தேவை. எனவேதான் இங்கு ருத்திரனாக தர்பாரண்யேஸ்வர் அருள்பாலிக்கிறார். இதை நான் எவ்வாறு அறிந்துணர்ந்தேன் எனில், மூலவர் தர்பாரண்யேஸ்வர் அர்த்தமண்டபத்தில் தியானத்தில் அமர்ந்து இருக்கும்போது #சந்திரகலையும் (குளுமை), #சூரியகலையும் (வெப்பம்) தாறுமாறாக மாறி மாறி ஓடி என் நாடியின் தன்மையை மாற்றியமைத்துக்கொண்டே இருந்தது. பொதுவாக சுவாச மாற்றமானது குறைந்தது இரண்டுமணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாறிமாறி ஓடும், ஆனால் அங்கோ ஒருமணி நேரத்தில் பலமுறை மாறிமாறி ஒடியதுமட்டுமில்லாமல் உடலில் நாடியின் வேகத்தையும் அதிகரித்தது, அதுமட்டுமில்லாமல் என்னால் அங்கு இயல்பாக அமர்ந்து அமைதியான ஆழ்ந்த தியானத்திற்குள் செல்லமுடியவில்லை, காரணம் அங்கு ஆக்கிரமித்திருக்கும் #ருத்திரனின் கட்டுக்கடங்கா வேகம் என் #மனத்தை சிதறடித்து, இருப்பினும் இதற்கு காரணம் என்னவென்றே விளங்காமல் வியர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து பார்த்தால், கோவில் கொடிமரத்தின் முன்மண்டபத்தில் #ருத்திர_பூஜைக்கான ஏற்பாடுகள் தடால்புடலாய் நடந்துகொண்டிருந்தது, பிறகுதான் விளங்கியது ருத்திர தன்மையை மெருகேற்றத்தானே (energy renewal) ருத்திர பூஜை நடத்துவார்கள், அப்போ அங்கே இருப்பது #ருத்திரன் என்பதை அறிவாலும் அறிந்து உறுதி செய்தேன்.

ஆக அங்கு #மந்தனாகிய_குளுமையும்; #ருத்ரனாகிய_வெப்பமும் ஒருசேர கலந்து நம்முள் கிரகிக்கப்படுவதால் ஏழரைச்சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்று சனியின் குறைபாட்டால் மந்தமாக இருப்பவர்களுக்கும், மேலும் சனி தசையால் பெரிதுமாக பாதிகப்பட்டவர்களுக்கும் இந்த கலவை #பெருமருந்தாகும். காரணம் மந்தனாகிய சனியுடன், ருத்திர தன்மையும் கலந்திருப்பதால் உடலுக்கு ஆற்றலும், புத்துணர்ச்சியும் இயல்பாகவே கிடைக்கப்பெறும். அதாவது உடலில் சனித்தன்மை குறைந்திருப்பின் அதை அங்கிருக்கும் மந்தனின் கதிரை நமக்குள் தேவையான அளவு செலுத்தி, சமப்படுத்தியும் (maintaining equilibrium), மாறாக சனித்தன்மை அதிகமாக இருப்பின் அதைக்குறைப்பதுமே இங்கிருக்கும் ருத்திரனாகிய தர்பாரண்யேஸ்வரரின் முக்கிய வேலையாகும்.

#முடிவுரை:

எனவே திருநல்லாறுக்கு செல்லும் அன்பர்கள், வெளியே காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் சனீஸ்வரரை பக்தியுடன் வணங்குவது மட்டுமில்லாமல் விசயம் பொருந்திய மூலஸ்தானத்தில் (எந்திரங்கள், தகடுகள்) தீர்மாணிக்கப்பட்டுள்ள #சனி_ருத்திரக் கலவையை உங்களுக்குள் இலவசமாக கிரகித்துக்கொள்ளுங்கள். அதற்கு அங்கு குறைந்த பட்சம் இரண்டுமணி நேரமாவது இருப்பது அவசியமாகும். உடலின் வலிமைக்கு அல்லது உடலுக்கு சனித்தன்மை எந்த அளவிற்கு அவசியமென்பதை திரு. Astro Babu அய்யா அவர்களின் சனியின் காரத்துவ கட்டுரையைப் படித்து தெரிந்துகொள்ளவும். நன்றி

#நானும்_கோவிலும் (பாகம்−2)

#அருள்மிகு_சுயம்புநாத_சுவாமி_திருக்கோயில்

பேரளம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. இக்கோயில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் #சுயம்புலிங்கமாக (அடி காணா ஆழம்) அருள்பாலிக்கிறார். அம்மன் #பவானியம்மன். அக்கினி தீர்த்தம் ஆலயத்திற்குக் கீழ் உள்ளது, தவிர #சனி, #ராகு மற்றும் #சந்திரன் இங்கு தனித்தனியாக உள்ளனர்.

தவத்தில் வல்லவரான #கார்ஷனாஜினி_மகரிஷி இத்தலத்தில் சுயம்புநாதரை நோக்கி பலஆண்டுகாலம் தவம்செய்து இப்புவியுல் உள்ள அனைத்து சிவஸ்தலங்களையும் ஒருங்கே காட்சியாக கண்ட ஸ்தலமாகும். மேலும்  #கலிதோஷத்தால் ஆன்மாக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இத்தல இறைவனை தரிசித்தவுடன் நீங்கவும், தன் பெயரால் இத்தலம் விளங்கவும் வரம் பெற்ற ஸ்தலமாகும்.

#ஸ்தல_சிறப்பு

இத்தலப் பெருமானாகிய சுயம்புநாதர் தன்னைப் பூசித்த #இந்திரனுக்குப் பெறுதற்கரிய பேற்றினைக் கொடுத்தார். #சூரியனுக்கு மிகுந்த ஒளியினை அளித்தார். யாக்ஞவல்கியர் பூசித்துப் பிரமஞானத்தைப் பெற்றார். #சுக்கிராசாரியர் வழிபட்டு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். #மார்கண்டேயர் வழிபட்டு நித்தியத்துவத்தையடைந்தார். #விசுவாமித்திரர் வழிபட்டு அதனால் க்ஷத்திரிய உடலைவிட்டு பிராமண்யத்தை அடைந்தார் என இத்தலபுராண வரலாறுகளாகும்.

#நானுணர்ந்த_சூன்யா:

இவ்வாறாக இக்கோவிலுக்கு புராண கதாப்பாத்திரங்கள் பலவாறு கூறப்பட்டாலும், நான் இன்று எதேச்சையாக இத்தலத்திற்குச் சென்று அறிந்த, உணர்ந்த விசயங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதே என் பிரார்ப்தமாக கருதுகிறேன். அதாவது பேரள முனிவர் இங்கு கடுந்தவம் செய்து இறைவனின் திருவுருவக் காட்சியைக் கண்டதால் #தியானம்_செய்பவர்களும்; நவக்கிரகங்களில் சுக்கிரன் இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தையை இங்கு இறைவனிடம் பெற்றதால் இங்கு #ஜோதிடர்களுமே  அதிகமாக வருவதாக அங்கிருப்பவர் ஒருவர் மூலம் அறிந்தேன். மேலும் அமைதியான தியானத்தில் அமரும்போது, இங்கு இருக்கும் தன்மையை அறிவால் பகிரமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். அதாவது, இத்தலம் சூன்யத்தின் கருவூலத்தை உணர, தியானம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இங்கு மனமானது ஒடுங்கி, இயல்பாகவே தியானநிலையை அடைவதுடன், சில வினாடிகள் #சூன்யாவாகவே மாற முடிந்தது எம் பாக்கியம், பராபரமே...!!!

#திருச்சிற்றம்பலம்